இடைநிலை/ மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
’’குற்றத்தின் தன்மை
தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள் கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தல்.
தண்டனையின் அளவு
முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவார்.தேர்வர் இத்தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால் அவரிடமிருந்து எழுத்துப் பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.
குற்றத்தின் தன்மை
தேர்வர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள் கையேடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துண்டுச் சீட்டுகள் ஏதேனும் தன்வசம் வைத்திருப்பதை அறைக் கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை தேர்வர்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தால்....
தண்டனையின் அளவு
தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம்பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார்.அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு இரத்து செய்யப்படும்.
தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால் அன்றைய தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் மேலும், அடுத்த ஓராண்டு அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.
குற்றத்தின் தன்மை
தேர்வர் மற்ற தேர்வரின் விடைத்தாளை பார்த்து தேர்வெழுதியிருந்தாலோ அல்லது பிறரின் உதவியினை தேர்வறைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்து பெற்றது கண்டறியப்பட்டால்..
தண்டனையின் அளவு
* தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார்.
* அடுத்து வரும் பாடத் தேர்வுகளை எழுத தடையில்லை.
* தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓர் ஆண்டு
அல்லது அடுத்த இருபருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தோவெழுத தடை விதிக்கப்படும்.
ஒரு தேர்வர் துண்டுத் தாளை தன்வசம் வைத்திருந்து பார்த்து எழுதியிருந்தாலோ / எழுத முயற்சி செய்தது கண்டறியப்பட்டால்.
தேர்வர் அப்பருவத்தில் எழுதிய அனைத்து பாடத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதுடன் குற்றத்தின் தன்மை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கும் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
தேர்வர்கள் அல்லது அவரைச் சார்ந்த நபர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற நிர்பந்தித்து இருந்தால்.
அப்பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
ஆள்மாறாட்டம் செய்தல்.
அப்பருவத் தோ்வு இரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
விடைத்தாளை பரிமாற்றம் செய்தல்.
தேர்வுகள் இரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும்.
.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.