தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நான்கு மாதங்களுக்கு பிறகு அவர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி


அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்


ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர், பொருளாதார இழப்பு ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்ற புகார் தொடர்ந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவதற்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதே நேரத்தில், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அவசர சட்டத்திற்கு அக்டோபர் 1ல் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.


சந்தேகம் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதிய கவர்னர்


 ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடைச் சட்ட மசோதா, அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் 28 நாட்கள் கழித்து, சில சந்தேகங்களை எழுப்பி நவம்பர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார் கவர்னர் ஆர்.என்.ரவி.


 ஆளுநர் சந்தேகங்களுக்கு 24 மணி நேரத்தில் விளக்கம் அளித்த சட்டத்துறை – ஆளுநர் மாளிகைக்கு சென்ற சட்டத்துறை அமைச்சர்.


ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கும் கூடுதல் விவரங்களுக்கும் 24 மணி நேரத்தில் விரிவான பதிலை சட்டத்துறை அமைச்சகம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. இந்நிலையில், டிசம்பர் 1, 2022ல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும், ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தார்.


 132 நாட்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்


 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் தொடர்ந்து அறிக்கை, பேட்டிகள் மூலம் ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தாம்பரம் அருகே நிதி நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் ரம்மி மூலம 20 லட்ச ரூபாயை இழந்துவிட்டதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆளுநர் இனியும் காலதாமதம் செய்யக் கூடாது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த சட்ட மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 132 நாட்களுக்கு பிறகு எப்படி அனுப்பப்பட்டதோ அப்படியே அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.


 திருப்பி அனுப்பியதற்கு காரணங்களை பட்டியலிட்ட ஆளுநர்


ஏற்கனவே, தான் கேட்ட சந்தேகங்களுக்கு தமிழக சட்டத்துறை விளக்கமளித்த நிலையிலும் சட்டத்துறை அமைச்சர் செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநரை நேரடியாக சென்று விவரங்களை அளித்த போதிலும் மேலும் சில  காரணங்களை பட்டியலிட்டு மசோதாவை ஆளுநர் திரும்ப அனுப்பியிருக்கிறார். தான் மசோதாவை திரும்ப அனுப்புவதற்கான காரணங்களை கடிதம் மூலம் தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். அதில்,



  • ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது என்பது மாநில அரசின் வரம்பிற்குள் வராத விஷயம் என்றும் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டுமானல் அதனை மத்திய அரசுதான் எடுக்க முடியும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தனிப்பட்ட நபரின் புத்திக் கூர்மை, திறமையின் அடிப்படையில் பணம் சம்பாதிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அடிப்படை உரிமை என்றும் அதனை அரசு நினைத்தால் கூட தடுக்க முடியாது என்றும் தன்னுடைய கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • அதே நேரத்தில், மாநில அரசின் அதிகாரங்களை பயன்படுத்தி, திறமையின் அடிப்படையில் விளையாடும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்த முடியுமே தவிர, அவற்றை முற்றிலும் தடை செய்வது என்பது இயலாத காரியம் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.


இவை மட்டுமில்லாமல், இன்னும் கூடுதல் காரணங்களை குறிப்பிட்டு, மசோதா திருப்பி அனுப்பப்படுவதாக ஆளுநர் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


ஆளுநரின் செயல் விசித்திரமாக இருக்கிறது – ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு காட்டம்


மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் விசித்திரமாக இருப்பதாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆன்லை சூதாட்ட தடை மசோதாவிற்கு பரிந்துரைகளை அளித்த குழுத் தலைவருமான சந்துரு விமர்சித்துள்ளார்.


மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி, அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு மட்டும் எப்படி கையெழுத்து போட்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அவசர சட்டம் சட்டப்பூர்வமாகவும், நிரந்தர சட்டம் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் ஆளுநர் கருதுவது சரியான நிலைபாடு இல்லை என்றும் மேனாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.


ஆளுநர் ஏற்கனவே கேட்ட எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் என்னுடைய தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் பதில் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கருத்தையும் கேட்டே இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அப்படி இருக்கும்போது, ஆளுநர் ஆர்.என். ரவி இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது உள்நோக்கம் கொண்டது என்றும் சந்துரு கண்டனம் தெரிவித்துள்ளார்.


மீண்டும் மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு திட்டம் 


இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான முடிவும் ஒப்புதலும் இன்று மாலை கூடும் தமிழக அமைச்சரவையில் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


2வது முறை அனுப்பினால், ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியாது 


ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை 2வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்ப முடியாது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்து ஆக வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும், அவர் திருப்பி அனுப்பாமல் அதற்கு ஒப்புதலும் கொடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைப்பதற்கு வாய்ப்புகளும் இருக்கின்றன.