மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் அமைந்துள்ளது பழமையும், பிரசித்தியும் பெற்ற ராகு - கேது பரிகார ஸ்தலமான கார்கோடகநாதர் ஆலயம். இங்கு முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன், தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் இது என்பதால், இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்பட்டு வருகிறது.
1951 -ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் விழா நடந்தது. இதையொட்டி கோயில் மகா மண்டபத்தில் அருள்மிகு கைவல்லி சமேத ஸ்ரீ கார்க்கோடகநாதர் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர், பெண்கள் மாரியம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
சுவாமிக்கு பாலால் கால் கழுவி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்களின் நலுங்கு உற்சவம் செய்தனர். தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு சாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பட்டாடை உடுத்தி திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோன்று மற்றொரு ஆன்மீக நிகழ்வாக மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் தை மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 வது ஆலயமுமான பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தில், தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. பரிமள ரெங்கநாயகி தாயார் மகாலெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வாழ்வு வளம்பெறவும், உலக நன்மை வேண்டியும் 108 திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.