ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தன.
இலங்கை சுதந்திர தினம்:
அந்த வகையில், இலங்கை சுதந்திரம் பெற்று இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு - காலி முகத்திடலில் அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளின் தூதர்கள் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு சென்றுள்ளனர். சுதந்திர தின நிகழ்ச்சிகள் சர்வமத வழிபாடுகளுடன் இன்று காலை ஆரம்பமாகின.
பௌத்த மத வழிபாடு பொல்வத்தை தர்ம கீர்த்தியாராமையிலும் இந்து மத வழிபாடுகள் கொழும்பு 4 புதிய கதிரேசன் ஆலயத்திலும் இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் கத்தோலிக்க மத வழிபாடுகள் மருதானை பாதிமா தேவாலயத்திலும் கிருஸ்தவ மத வழிபாடுகள் கொழும்பு காலி முகத்திடல் நடந்தன.
சுதந்திர தின நிகழ்ச்சியில் இலங்கையின் முப்படையினர், காவல்துறை, அதிரடிப்படையினர், ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை ஆகியோரின் மரியாதை அணி வகுப்பு இடம்பெற்றது. அத்தோடு 108 வாகனங்களின் வாகன பேரணியும் இடம்பெற்றது.
கடற்படையில் 7 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 58 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 1001 கடற்படை வீரர்கள் இம்மரியாதை அணி வகுப்பில் பங்குபெற்றனர்.
முன்னதாக, நிகழ்ச்சிகள் ஆரம்பமானதன் பின்னர் காலை 8.15 க்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதற்பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வருகை தந்தனர்.
கரிநாள்:
இந்நிலையில், இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக கடைபிடிப்போம் என தமிழர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், யாழ் பல்கலைக்கழத்தில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியுள்ளது.
இதில், பல்வேறு மாணவர் அமைப்புகள், சிவில் சமூகங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். பேரணி செல்லும் இடங்களுக்கு வந்து தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் வாக்குறுதி அளித்திருந்தாலும் சிங்கள அமைப்புகள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தாண்டு சுதந்திர தினத்தை தமிழ் மாணவர்கள் கரிநாளாக கடைபிடித்துள்ளனர்.
இதற்கிடையே, இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் கலந்து கொண்டார்.
அதிபர் ரணில் மற்றும் இலங்கை வெளியறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் அவர் இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.