சென்னையில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் தான், கடந்த 8 நாட்களாக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். கூட்டணியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். வலுவான ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருந்தோம்.


அவகாசம் கோரிய ஓபிஎஸ்


அதைத்தொடர்ந்து தான் நேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து, ஒரே வேட்பாளரை முன்னிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது, கட்சி மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக, எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஏற்கனவே அந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற  வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு அவர் கூடுதல் அவகாசம் கேட்டார்.


”ஒரே வேட்பாளர் வேண்டும்”


இந்நிலையில் மீண்டும் கோருகிறேன், ஒரு வேட்பாளர் உறுதியான வேட்பாளர், உறுதியான வலிமையான வேட்பாளர், மக்களுக்கு அறிமுகமான வேட்பாளர் பின் அணிவகுத்து நின்று பாஜக உழைத்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த இடைதேர்தலில் பாஜக போட்டியிடாது என ஏற்கனவே ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சிடம் தெரிவித்து விட்டோம். அதிமுக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் யார் என்பது குறித்து நல்ல முடிவு வரும் என காத்திருக்கிறோம். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். பாஜகவின் ஆதரவு வேண்டுமென்றால், ஒரே வேட்பாளர் வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு” என கூறினார்.


ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்தித்த அண்ணாமலை


முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளில் யாருக்கு பாஜக ஆதரவு அளிக்க உள்ளது என, இழுபறி நீடித்தது. இதையடுத்து, டெல்லி சென்று திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அவரவர் இல்லங்களில் நேற்று தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


7ம் தேதி வரை காத்திருங்கள் - சி.டி. ரவி


அதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. ரவி, ”ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பை சேர்ந்து பணியாற்ற வலியுறுத்தினோம். திமுகவை வீழ்த்தவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் ஒருங்கிணைந்த அதிமுக அவசியம், எனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-ஐ ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்” என கூறினார்.


ஈபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு:


இதுதொடர்பாக பேசியுள்ள ஈபிஎஸ் ஆதரவாளரும்,  அதிமுக ஐடி விங் மண்டல செயலாளருமான சிங்கை ஜி ராமச்சந்திரன், ”எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என சொல்ல சி.டி.ரவி யார்?  திமுகவிற்கு எதிராக தனித்து போட்டியிட்டு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த எங்களுக்கு அறிவுரை கூறலாம் என எப்படி நினைக்கிறீர்கள்? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்” என காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.


பாஜக பதிலடி:


இதுதொடர்பாக பதில் அளித்துள்ள பாஜகவின் ஐடி விங் மாநில தலைவர்  நிர்மல் குமார், “எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்?  என கேள்வி எழுப்பினர். இதேபோன்று, பாஜக பிரமுகர்கள் பலரும் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு சமூக வலைதளங்களில் காட்டமாக பதிலளித்தனர். இதனால், இருகட்சி தொண்டர்களும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான், ஒற்றை வேட்பாளரை மட்டுமே எதிர்பார்ப்பதாக, அண்ணாமாலை விளக்கமளித்துள்ளார்