மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, கஞ்சாநகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
நூற்றாண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆஞ்சநேய பெருமாள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். கோயிலில் பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபடுபவருக்கு சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், சத்ரு பயம் நீங்கி, தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம்.
இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற கோயிலிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்களும் ஊர் பொதுமக்களும் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் புனரமைப்பு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22 -ஆம் தேதி வாஸ்து பூஜை செய்யப்பட்டு, 23 -ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் விமானத்தை அடைந்தனர்.
தொடர்ந்து கோயில் அருகே கருடன் வட்டமிட கோயில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயபெருமானுக்கு மூலாபிஷேகம் செய்து வைக்கப்பட்டடு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை கோயில் அர்ச்சகர் சம்பந்த குருக்கள் மற்றும் சர்வ சாதகம் மருதூர் ராஜகோபால பட்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செம்பனார்கோவில் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.