பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
SBI Recruitment 2023: டிகிரி படித்தவரா? வங்கி வேலை; 5,280 பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
இந்நிலையில் இக்கோயிலுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்துடன் இன்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகள் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.