சென்னை அடுத்த பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு, நிலம் கையகபப்டுத்த நிர்வாக ஒப்புதல் அளித்தது தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 20 கிராமங்களில் ஐயாயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட 11 கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட 9 கிராமங்களில் இருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கிராமங்களின் விவரங்கள்:
அரசாணையின்படி, காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பேரண்டூர் -ஏ, பேரண்டூர் - பி, தண்டலம், பொடாவூர், தொடூர், நெல்வாய், வளத்தூர், மாடபுரம், சேக்காங்குளம், அட்டுபுத்தூர் மற்றும் குத்திரம்பாக்கம் ஆகிய 11 கிராமங்களில் இருந்து மொத்தம் ஆயிரத்து 302.28 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளது. அதேபோல, ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள சிறுவள்ளூர், கரை, அக்கம்புரம், எடையார்புரம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்லிபாடி மற்றும் மதுரமங்கலம் ஆகிய 9 கிராமங்களில் இருந்து இரண்டாயிரத்து 325.44 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் திட்டமும் - எதிர்ப்பும்:
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800- க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.