உலகின் ஆதியாகிய சிவபெருமானின் மிகவும் உகந்த நாள் சிவராத்திரி. சிவராத்திரி தினத்தில் நாம் விரதம் இருந்து எம்பெருமானை வணங்கினால், நமது வாழ்வில் சந்தித்து வரும் துன்பங்கள் நீங்கி பயன்பெறுவோம் என்பது ஐதீகம்.


வரும் 18-ந் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் அன்றைய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று எம்பெருமானை மனம் உருகி வேண்டுவார்கள். அன்றைய தினத்தில் பலரும் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளிலும் ஈடுபடுவார்கள்.


செய்யக்கூடாதவை:


சிவராத்திரியன்று இரவு முழுவதும் பக்தர்களாகிய நாம் கண்விழித்து இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆலயங்களில் செய்யப்படும் பூஜையானது சிவராத்திரி இரவின் அதிகாலை 4 மணியளவிலே நிறைவு பெறும். அதன்பின்னர், ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு நாம் நமது விரதத்தை நிறைவு செய்யலாம்.


இதனால், அதிகாலை வரை நாம் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். அதற்கு மாறாக, ஆலயங்களுக்கு வெளியில் அளிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது என்பது விரதத்திற்கு உகந்தது அல்ல. ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடாவிட்டால் வீட்டிற்கு வந்து ஏதேனும் ஒரு சமைத்து அதை சிவபெருமானுக்கு படையலிட்டு பூஜைகள் செய்த பின்னர் நாம் உணவாக அருந்தலாம்.


மறுநாள் தூங்கலாமா?


சிவராத்திரிக்கு மறுநாள் பொழுதில் பலரும் உறங்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சிவராத்திரிக்கு மறுநாள் உறங்குவது என்பதும் செய்யக்கூடாத ஒன்றாகும். அன்று மாலை நாம் பூஜையை முடித்த பிறகே வழக்கமான இரவு தூக்கத்திற்கு செல்ல வேண்டும். சிவராத்திரிக்கு கண்விழித்திருந்தால் நன்மை பயக்கும் என்ற பெரியோர்களின் வார்த்தையை தவறாக புரிந்து கொண்ட சிலர் தொலைக்காட்சி பார்ப்பது, விளையாடுவது என்று பொழுதை கழிப்பார்கள். இதுவும் மிகவும் தவறான செயல் ஆகும்.


சிவராத்திரிக்கு பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டுமென்றால் சிவாலயத்திற்கு சென்று அவருக்கு செய்யும் பூஜைகளை மனம் உருகி பிரார்த்திக்க வேண்டும். பூஜைகளின்போதும் கவனத்தை சிதறவிடாமல் சிவாய நமக, ஓம் நமச்சிவாய, தென்னாட்டுடைய சிவனே போற்றி என்ற சிவ நாமங்களை கூற வேண்டும்.


பூஜைகள்:


சிவராத்திரி தினத்தில் ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலே இருக்கும் சூழல் ஏற்பட்டால் சிவலிங்கத்திற்கு நான்கு கால பூஜை செய்ய வேண்டும். அதாவது, அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்து சிவலிங்கத்தை வழிபட வேண்டும். வீடுகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம், பெரிய புராணம் ஆகிய சிவன்பாடல்களை ஒலிக்க விடலாம்.


சிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்து முறையாக விரதமிருந்தால் நமது வாழ்வு சிறப்பதற்கான ஒழுக்கம், ஞானம், புகழ், செல்வம் ஆகியன நம்மை வந்து சேரும்.  சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்கள் தங்களது உடல்நலம் ஒத்துழைத்தால் மட்டும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈசனை மனதில் நினைத்து பூஜித்தாலே போதும். 


மேலும் படிக்க: Maha Shivaratri Fasting: மகா சிவராத்திரி...சிவனுக்கு விரதம் இருக்கும் முறைகளும், பூஜை நேரங்களும்...முழு விவரம்!


மேலும் படிக்க: எம பயம் நீக்கும் தலமாக விளங்கும் திருசக்கராப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் கோயில்