தஞ்சாவூர்: எம பயம் நீக்கும் தலமாகவும், பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 17-வது தலமாக உள்ளது திருசக்கராப்பள்ளி. இத்தலம் தற்போது அய்யம்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூருக்கு அருகில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் சக்ரவாகேஸ்வரர், இறைவி தேவநாயகி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அய்யம்பேட்டையில் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் இருக்கும் பகுதி சக்கராப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் சக்கரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சக்கராப்பள்ளி (சக்கரமங்கை) பாடல் பெற்ற தலம் என்பது மட்டுமின்றி, சப்தமங்கைத் தலங்கள் என்று போற்றப்படும் 7 தலங்களில் ஒரு தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கை தலங்கள் ஆகும். பிராமி வழிபட்ட தலம் சக்கராப்பள்ளி. மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால், இத்தலம் திருசக்கராப்பள்ளி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார். சக்கரவாகப் பறவை வழிபட்டதால், இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.
எம பயம் நீக்கும் தலமாக விளங்கும் திருசக்கராப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் கோயில்
என்.நாகராஜன் | 06 Feb 2023 05:52 PM (IST)
சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார்.
சக்ரவாகேஸ்வரர் கோயில்
Published at: 06 Feb 2023 05:52 PM (IST)