மகா சிவராத்திரி 2023


பொங்கிவந்த ஆலகால விஷத்தினால் மக்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான்.. இப்படி மகா சிவராத்திரி தினத்திற்கு பல்வேறு கதைகளை புராணங்கள் கூறுகின்றன. 


உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவ ராத்திரி விரதம்...எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது. 


மகா சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது இதிகாசங்களின் படி ஐதீகமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான குறிப்புகள் திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்தாண்டுக்கான புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 18 ஆம் தேதி (பிப்ரவரி, 18,2023) கொண்டாடப்பட உள்ளது. இந்த மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி திதியும் சிவபெருமானுக்குரியது ஆனாலும் மாசி மாத மகா சிவராத்திரி, சிவனை வழிபாடு செய்வது சிறப்பானது.


விரதம்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருக்க வேண்டிய விரதங்களில் முக்கியமானது சிவனுக்குரிய விரதம். இந்த மகா சிவாரத்திரி நாளன்று விரதம் இருப்பது நல்லது.  மகா சிவாராத்திரி நாளில் விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களையும் போக்கும். மகா சிவாராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருந்திருக்கும். நான்கு கால பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமர்சையாக நடைபெறும்.


பூஜை நேரம்


முதல் கட்ட பூஜை : பிப்ரவரி 18 அன்று காலை 6.41 முதல் இரவு 9.47 வரை இருக்கும்.


இரண்டாம் கட்ட பூஜை : இரவு 9.47 முதல் நள்ளிரவு 12.53 வரை இருக்கும்.


மூன்றாம் கட்ட பூஜை : பிப்ரவரி 19ஆம் தேதி அன்று பிற்பகல் 12.53 மணி முதல் மாலை 03.58 வரை இருக்கும்.


நான்காம் கட்ட பூஜை : பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 03.58 மணி முதுல் இரவு 7.06 வரை இருக்கும்.


இந்த சிவராத்திரி அன்று சிவாலங்களுக்கு அபிஷேக பொருட்களையும் அதற்கு ஆகும் செலவுகளையும் ஏற்றக் கொள்வது சிறப்பு வாய்ந்தது.


விரதம் கடைபிடிப்பது எப்படி?


பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதத்தை தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19ஆம் தேதி முடிக்க வேண்டும். அல்லது, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 6.59 மணிக்கு தொடங்கி மதியம் 3.24 மணிக்குள் எந்த நேரத்திலும் விரதத்தை முடிக்கலாம். இந்த அழகான சிவராத்திரிக்கு எப்படி விரதம் இருப்பது என்றால், காலையிலேயே எழுந்து நீராடி விட்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு வீட்டின் பூஜை அறையில் உள்ள சிவன் சிலையை அலங்காரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.


பின்பு, சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு கரும்புச்சாறு, பால், நெய் போன்றவைகளால் அபிஷேகம் செய்யுங்கள். இதனுடன் துளசி, ஜாதிக்காய், தாமரை மொட்டு, பழங்கள்,  தட்சிணை ஆகியவற்றை சிவனுக்கு காணிக்கையாக்குங்கள். விரதம் இருப்பவர்கள் தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். மேலும், சாமிக்கும் படைத்திருக்கும் பழங்களை சாப்பிடலாம். பின்பு, அடுத்த நாள் காலையில் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.


வில்வ காயை காயவைத்து, அதை வெட்டி விதைகளை வெளியேற்றிவிட்டு, திருநீறு வைத்து அதை பயன்படுத்துவது உகந்தது என நம்பப்படுகிறது