உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண கருப்பசாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவில் புனித நீர் ஊற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் 500 கிலோ மலர் தூவப்பட்டது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த வாகைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அயன் அனஞ்ச பெருமாள் மற்றும் கல்யாண கருப்பசாமி திருக்கோயில். இந்த கோயிலை புனரமைப்பு செய்து 21 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதேபோல் சுவாமிக்கு 16 வகையான அபிஷேக தீபாரதனை செய்யப்பட்டு, இறுதியாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹிதி தீபாரதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை தலையில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.,
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களுடன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 500 கிலோ மலர்களுடன் கும்பாபிஷேகம் நடைபெறும் கோவிலுக்கு வந்த ஹெலிகாப்டர் புனித நீர் ஊற்றியதும், மூன்று சுற்றாக 500 கிலோ பூக்களை கோபுரத்தின் மேல் பகுதியில் சுற்றிக் கொண்டே தூவப்பட்டது. தொடர்ந்து சுற்றி இருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதினம் நேரில் கலந்து கொண்டு கருவறையில் உள்ள கல்யாண கருப்பசாமி சிலைக்கு தீபாராதனை செய்து வழிபாடு செய்தார்.,
இதுகுறித்து பக்தர் உசிலை செந்தில் கூறுகையில், “அயன் அனஞ்ச பெருமாள் மற்றும் கல்யாண கருப்பசாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் வேண்டுதல் நிறைவேறும். தற்போது கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தீர்த்த நீரை சேகரித்த பக்தர்கள் வீடுகளுக்கு சென்று தெளித்தனர். கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் கலசத்திற்கு பூ தூவியது பிரமாண்டத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்பத்தியது என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - RB Udayakumar: மாநாடு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமான புளியோதரை பற்றி பேசுகின்றனர் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
மேலும் ஆன்மிக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மேலமங்கநல்லூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்