ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானா மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலமானது மிகவும் முக்கியமான மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதலமைச்சராக உள்ள சந்திரசேகர்ராவ் இந்த முறையும் தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.


மகனுக்கு வாய்ப்பு:


இதற்காக முதற்கட்டமாக 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தன்னுடைய பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர் ராவ் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மல்கஜ்கிரி எம்.எல்.ஏ.வுமான மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் தன்னுடைய மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் மட்டுமே தான் போட்டியிடுவேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேட்பாளர் பட்டியல்களை அறிவிப்பதற்கு முன்பு திருப்பதிக்கு தனது மகன் ரோகித்துடன் அவர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், எனது மகனுக்கு வாய்ப்பு அளித்தால் மட்டுமே நான் போட்டியிடுவேன். கட்சி என்னை விலகச்சொல்லவில்லை. ஆனால், எனது மகனுக்கு டிக்கெட் வழங்கவில்லை என்றால் நான் போட்டியிடுவது குறித்து யோசிப்பேன்.


ஒரு குடும்பத்தில் 2 வேட்பாளர்:


தேவைப்பட்டால் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எனது மகனை மேடக் தொகுதியில் எம்.எல்.ஏ.ஆக்க தயாராக இருக்கிறேன். ஒரு குடும்பத்தில் ஏன் 2 வேட்பாளர்கள் இருக்க முடியாது. கே.சி.ஆர். குடும்பத்தில் இருக்கின்றனர். வேட்பாளரை திறமையின் அடிப்படையில் அறிவிக்க வேண்டும். என் மகன் என்னை விட திறமையானவர்” என்றார்.


 ஆனால், ஹனுமந்த் ராவ் தனது மகனுக்காக கேட்ட தொகுதியை கட்சித் தலைமை பத்மதேவந்தர் ரெட்டிக்காக ஒதுக்கியுள்ளது. சந்திரசேகர் ராவ் குடும்பத்திற்கு நெருக்கமான பத்மவேந்தர் அந்த தொகுதியில் ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்.எல்.ஏ. ஹனுமந்த் ராவ் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மாப்பிள்ளையான அமைச்சர் ஹரிஷ் ராவ்விற்கு தக்க பாடம் புகட்டுவேன் என்றும் கூறினார்.


ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சிக்குள் அதற்குள் உட்கட்சி பூசல் தொடங்கியிருப்பது கட்சித் தலைமை மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேட்டி அளித்ததுபோலவே, ஹனுமந்த் ராவுக்கு அவர் எம்.எல்.ஏ.வாக உள்ள மல்காஜ்கிரி தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் ஹனுமந்த் ராவ் போட்டியிடுவாரா? அல்லது தனது மகனை மேடக் தொகுதி வேட்பாளராக போட்டியிட வைப்பாரா? என்பது விவாதமாகியுள்ளது.


மேலும் படிக்க: Chandrayaan 3 Update: சந்திரயான் 3.. நேரம் குறிச்சாச்சு, நிலவில் விக்ரம் லேண்டர் நாளை தரையிறங்குவது உறுதி - இஸ்ரோ


மேலும் படிக்க: PM Modi South Africa Tour: 40 வருடங்களுக்குப் பின் கிரீஸ்.. தென்னாப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி : பிரிக்ஸ் மாநாடு