அயோத்தியில் பால ராமர் சிலை நிறுவப்பட்டு கோவில் திறக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராவணனுக்கு தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடத்தி சிவனடியார்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஓம் திருமேனி சங்கம ஆசிரமம். இங்குள்ள தமிழ் ஆலயத்தில் நேற்று முன்தினம் ராமர் மற்றும் சீதாதேவிக்கு தமிழில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை குடவாசல் சுவாமிகள் தலைமையில் தமிழ் ஆலயத்தில் அமைந்துள்ள குன்று பகுதியில் தமிழ் மன்னர்களில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.
ராவணன் உருவ படத்திற்கு முன்பு புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டும் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கனிகள் படைக்கப்பட்டும் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. ராமாயண இதிகாசத்தில் தீவிர சிவ பக்தராக அடையாளப்படுத்தப்பட்ட ராவணனின் சிவ பக்தியை போற்றும் விதமாக பதினோராவது சித்தர் கருவூரார் சுவாமிகளின் குரு வழிபாட்டுச் சீடர்களான சிவ நெறிச் செல்வர்கள் தமிழில் வேத மந்திரங்களை முழங்கினர்.
இதனைத் தொடர்ந்து சித்த ராமாயணம், இராவண காதை, மண்டோதரி வாக்கு, ராவணன் நீதி, சீதை நீதி என பெயரிடப்பட்ட 60 நூல்கள் குறித்து விளக்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இந்த ராவண யாக வேள்வி பூஜையில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவ பக்தர்கள் பங்கு பெற்றனர். அயோத்தியில் ராமருக்கு சிலை பிரதிஷ்டை நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் ராவணனுக்கு பூஜைகள் நடைபெற்று இருப்பது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.