2024ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ தகுதி படிப்புதவித்‌ தொகைத் திட்டத்‌ தேர்வு (என்எம்எம்எஸ்) நுழைவுச்‌ சீட்டுகளை நாளை (ஜன.24) முதல் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்.


நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 2008 முதல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.


மாதம் ரூ.1000


இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 


இந்த நிலையில் தேர்வு நுழைவுச்‌ சீட்டுகளை நாளை (ஜன.24) முதல் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் செல்வகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


பிப்.3-ல் தேர்வு


2023 - 2024-ம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ தகுதி படிப்புதவித்‌ தொகைத்‌ திட்டத்‌ தேர்வு (என்எம்எம்எஸ்) ௦3.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும்‌ மாணவர்களின்‌ பெயர்பட்டியலுடன்‌ கூடிய வருகைத்தாட்கள்‌ (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன்‌ கிழமை) பிற்பகல்‌ முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களும்‌ தவறாமல்‌ பெயர்‌ பட்டியலினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். 


தேர்வுகூடநுழைவுச்சீட்டு பெறுவது எப்படி?


மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) 24.01.2024 (புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ தங்கள்‌ பள்ளிக்கான User ID / Password -ஐ கொண்டு பதிவிறக்கம்‌ செய்து மாணவர்களுக்கு வழங்கவும்‌, தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்‌ பதிவிறக்கம்‌ செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்ய வேண்டும். 


தேர்வர்களின்‌ தேர்வுகூட நுழைவுச்‌ சீட்டுக்களில்‌ பெயர்‌ / புகைப்படம்‌ / பிறந்த தேதி/ வகுப்பினம் (Community) ஆகியவற்றில்‌ திருத்தம்‌ எதும்‌ இருப்பின்‌ திருத்தத்தினை சிவப்பு நிற மையினால்‌ சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம்‌ சான்றொப்பம்‌ பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in