ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் Brahma Purishvarar Temple  


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் ( perunagar brahmapureeswarar temple) அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோயிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.




அந்தவகையில் ,பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் காலை திருக்கல்யாணம் ரிஷப வாகன சேவை மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு  இடத்தை பிடிக்கும். நேற்று இரவு  திருக்கோவிலில் சுவாமி  யானை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏழாம் நாள் உற்சாகத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.


 கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும்  பக்தர்கள் செய்திருந்தனர்.






தைப்பூசம் எப்போது?


கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


களைகட்டும் முருகன்  கோயில்கள்:


தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திரு ப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் விரதம்:


தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.