மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், கல்வி, வேலைவாய்ப்பில் என்ன அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன? 


பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டாக பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், தேர்தலுக்கான முன்னோட்டமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் பட்ஜெட் குறித்து முன்னதாக பேசியிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும் வரை அரசின் செலவினங்களுக்காக மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட், இடைக்கால செலவினங்களுக்கு பணம் ஒதுக்க அனுமதி கோருவதாக மட்டுமே இருக்கும். ஏனென்றால், நாம் தேர்தல் ஆண்டில் இருக்க போகிறோம். புதிய அரசாங்கம் அமையும் வரை அரசாங்கத்தின் செலவினங்களை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே, புதிய அரசாங்கம் வந்து 2024 ஜூலையில் அடுத்த முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார். 


இதில் ஜென் ஸீ என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் என்னவெல்லாம் எதிர்பார்க்கின்றனர்? கல்வி, வேலைவாய்ப்பில் என்ன அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று காணலாம்.


2000-களில் பிறந்து 20 வயதுகளில் இருக்கும் இளம் தலைமுறையினர், இந்த முறை முதல் தலைமுறை வாக்காளர்களாக அறியப்படுகின்றனர். உலக அளவில் இவர்கள்தான் 52 சதவீதம் இருப்பதாக நாஸ்காம் 2021 ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த நிலையில், கல்வி, வேலைவாய்ப்புத் துறையில் இவர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதைக் காணலாம்.


கல்விக் கடன் தளர்வு


பொதுவாக மத்திய, மாநில அரசுகள், மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடியை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், கல்விக் கடனில் தளர்வு, கல்வி சார்ந்த பொருட்கள், சேவைகளில் ஜிஎஸ்டி குறைப்பு ஆகியவை முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.


கல்வித் துறைக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதேபோல, கல்வி சார்ந்த பொருட்கள், சேவைகளுக்கு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


அசெர் ஆய்வறிக்கைப்படி, 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அடிப்படை கணிதத்தைச் செய்யவே தடுமாறுகின்றனர். டிஜிட்டல் சாதனங்களைக் கையாள்வதிலும் திறன் வளர்ப்பிலும் பின் தங்கியுள்ளனர். இதனால் டிஜிட்டல் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.


வேலைவாய்ப்பில் என்ன செய்ய வேண்டும்?


கார்மெண்ட்ஸ், நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தொழிலுக்கு அரசே ஊக்கத்தொகை (production linked incentive scheme) வழங்கும் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராமப் புறங்களுக்கு மட்டுமல்லாமல், நகர்ப் புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட வீடுகளுக்கும் இது உதவும்.


வரிச் சலுகை


இளம் தலைமுறை வாக்காளர்களைக் கவரும் வகையில், ஆண்டு வருமானத்தில் வரி விதிக்கப்படுவதற்கு சலுகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு கிடையாது என்று மத்திய அரசு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.