மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை தரிசனம் செய்ய வந்தார். அப்போது மன்னர் வந்ததை கூட கவனிக்காமல் மன்னருக்கு உடைய மரியாதை செய்யாமல் அபிராமி பட்டர் தியான நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட சரபோஜி மன்னர் அருகில் இருந்தவர்களில் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அவர்கள் அபிராமி பட்டரை பற்றி அவதூறாக அவர்கள் மன்னரிடம் கூறியுள்ளார்.
ஆனால், சரபோஜி மன்னர், அவர்களின் வார்த்தைகளை நம்பாமல், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய சரபோஜி மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அதற்கு, அம்பிகையின் தியான நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் தவறி பவுர்ணமி என கூறியுள்ளார். அமாவாசையை, பவுர்ணமி என்று தவறுதலாக கூறியதால் மன்னர் சினம் கொண்டார். அதனை தொடர்ந்து அபிராமி பட்டர், ‘உதிக்கின்ற செங்கதிர்‘ என்று ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். இதில் 79 -வது பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றியதாக புராணங்கள் செல்லப்படுகிறது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வுவை ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை அன்று அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழாவாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தை மாத அமாவாசை தினமான நேற்றிரவு ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடினர். அப்போது ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்யப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு தை அமாவாசையையொட்டி பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி திருக்கடையூர் ஆணைக்குளத்து கரையில் அமைந்துள்ள எதிர்காளஸ்வரர் கோயிலில் இருந்து 1008 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அமிர்தகடேஸ்வரர் கோயிலை அடைந்தனர். அங்கு அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.