மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர், மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது. 




இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆஞ்சநேயர் சுவாமி முத்துச்சட்டை அங்கியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டதை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து  சுவாமியை தரிசனம் செய்தனர்.




மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 




பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தைமாத பிரமோற்சவ விழா கடந்த 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.  பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஶ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனுவாசபெருமாள் மகாமண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கே வேதியர்கள் மந்திரம் ஓத, சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றி ஊஞ்சல் உற்ச்சவம், நடைபெற்று திருக்கல்யாண வைபவமான மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.




மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 




பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.