Intranasal Vaccine: பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து வரும் ஜனவரி 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாசிவழி தடுப்பு மருந்து:
பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசி தடுப்பு மருந்து iNCOVACC என்று அழைக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நாசி வழியாகத்தான் நம்மை ஆட்கொள்கிறது என்பதால் இந்த iNCOVACC தடுப்பு மருந்து நாசி வழியாக செலுத்தும் போது இது மூக்கிலேயே அதாவது வைரஸ் நுழைவுவாயிலிலேயே அதனைத் தடுக்கவல்லது. இந்நிலையில் இதனை பூஸ்டராக ஆறு மாத இடைவெளியில் இரண்டாவது தவணையில் எடுத்துக் கொள்வதால் கொரோனா தொற்றிலிருந்தும், பரவலில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே பெரும்பாலான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் பெரும்பாலான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜனவரி 26ல் அறிமுகம்
முன்னதாக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி டிசிஜிஐ இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி கொரோனா பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் iNCOVACC பூஸ்டருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச அறிவியல் விழா நடைபெற்றது. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா இலா பங்கேற்றார். அந்நிகச்சியில் அவர் கூறியதாவது, ”பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். iNCOVACC என்று அழைக்கப்படும் நாசி வழி தடுப்பு மருந்து குடியரசுத் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்றார்
”iNCOVACC ஆனது , மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்முதலுக்கு ஒரு டோஸுக்கு ரூ. 325 ஆகவும் , தனியார் தடுப்பூசி மையங்களில் ரூ. 800 ஆகவும் இருக்கும் என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பு மருந்தானது ஒரு தவணை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்கு பின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.
4,000 பேருக்கு நாசி வழி தடுப்பூசி பரிசோதனை
நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்தால் கைகளில் செலுத்திக் கொள்ளும் ஊசியிலிருந்து விடுதலை கிடைக்கும். சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி தேவையில்லை. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் சுமார் 4,000 தன்னார்வலர்களுடன் நாசி தடுப்பபு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்தது. இதுவரை எந்த பக்க விளைவுகளும் அல்லது பாதகமான எதிர்வினையும் இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக சீனாவில் அன்றாட கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் நாம் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றன்றனர். இந்நிலையில் மூக்கின் வழியே செலுத்தி கொள்ள கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.