ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே 200 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் கோர தாக்குதல் காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உக்ரைனில் தவித்து வருகின்றனர். உக்ரைன் மீது தீவிர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, ஏராளமான உக்ரைன் ராணுவ வீரர்களையும் சிறைப்பிடித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை உக்ரைனில் இருந்து சிறை பிடிக்கப்பட்ட 205 பேரை ரஷ்யா விடுவித்தது. அவர்களில் உக்ரைன் நாட்டுக்காக போரில் சண்டையிட்ட மிகைலோ டியானோ என்ற ராணுவ வீரரும் ஒருவர். மரிய போல் நகரத்தை காப்பதற்காக நடைபெற்ற சண்டையில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் சண்டையிட்டார். ரஷ்யாவில் இருந்து உக்ரைன் திரும்பிய அவரது நிலையை கண்டு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, உலக மக்களே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஒரு ராணுவ வீரருக்கு உரிய திடகாத்திரமான, ஆரோக்கியமான உடற்கட்டமைப்பை பெற்ற மிகைலோ டியானோ, ரஷ்ய சிறையில் இருந்து உக்ரைன் திரும்பியபோது மிகவும் உடல் மெலிந்து, முகம் மற்றும் கன்னங்களில் மோசமான காயங்களுடன், பல நாட்கள் பட்டினி கிடந்து நோயால் அவதிப்படும் நபரைப் போல உருக்குலைந்து காணப்பட்டார்.
அவரை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு உருக்குலைந்த ராணுவ வீரர் மிகைலோ டியானோ தற்போது உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம். ”உக்ரைனிய வீரர் மிகைலோ டியானோ அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். அவர் ரஷ்ய சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இப்படித்தான் தொடர்கிறது என்று பதிவிட்டுள்ளது. தற்போது, உக்ரைன் ராணுவ வீரரின் சிகிச்சைக்காக அவரது மகள் உள்பட குடும்பத்தினர் சிகிச்சைக்காக பணம் திரட்டி வருகின்றனர்.
உக்ரைன் ராணுவ வீரரின் உருக்குலைந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைன் வீரரின் நிலையை கண்டு ரஷ்யாவிற்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : முசோலினியின் முன்னாள் ஆதரவாளர்...தீவிர வலதுசாரி...இத்தாலியின் முதல் பெண் பிரதமராகும் ஜார்ஜியா மெலோனி
மேலும் படிக்க : Watch Video: மாஸ்க்குடன் அமர்ந்துள்ள மோடி… ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு சடங்கு… வீடியோ வைரல்!