ராமதாஸின் உயிருக்கு அன்புமணி அல்லது அவரது மனைவியால் ஆபத்து உள்ளது என வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனருமான வி.ஜி.கே.மணிகண்டன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பாமகவின் முதல் மோதல் 

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 2024 ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மருத்துவர் ராமதாஸ் தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதன் காரணமாக ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி 

இந்த நிலையில், கடந்த மாதம் 10 -ஆம் தேதி அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் எனவும் தெரிவித்தார். அதேவேளையில், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன்..?அப்படி நான் என்ன தவறு செய்தேன்..? நான் கடந்த ஒரு மாதமாக தூங்கவில்லை மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

பரபரப்பு பத்திரிகையாளர் சந்திப்பு 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 35 வயதிலேயே அன்புமணி ராமதாஸை மத்திய கேபினட் அமைச்சராக்கியது தவறு என்றும் கூறி இருக்கிறார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி, செளமியா தான். இருவரும் தனது கால்களை பிடித்து கண்ணீர்விட்டு அழுதனர். பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்றும் பகீர் குற்றச்சாட்டை ராமதாஸ் கூறினார். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்திலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறையில் பத்திரிகையாளர் சந்திப்பு 

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்துள்ள இந்த சூழலில், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனருமான வி.ஜி.கே.மணிகண்டன் மயிலாடுதுறை அருகே வழுவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ராமதாஸ் உயிருக்கு ஆபத்து 

பாமகவை வழிநடத்தும் பக்குவமும், தலைமைப்பண்பும் அக்கட்சியை உருவாக்கிய மருத்துவர் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் அன்புமணி ராமதாஸ் பாமகவை கைப்பற்ற முயல்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தடுத்து அவரை மருத்துவக்கொலை செய்தவர் அன்புமணி ராமதாஸ். இதனை மருத்துவர் ராமதாஸே விரைவில் ஒப்புக்கொள்வார். 

அன்புமணியின் பின்னால் செல்பவர்களுக்கே எதிர்காலத்தில் அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால்தான் பலர் அவர் பின்னால் செல்கின்றனர். எனக்கு பாமகவை பிடிக்காது. இருந்தாலும் நான் மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறேன். ஏனென்றால் அன்புமணிக்கு உழைக்கத் தெரியாது. மருத்துவர் ராமதாஸுன் உயிருக்கு அன்புமணி அல்லது அன்புமணியின் மனைவியால் ஆபத்து உள்ளது என பகீர் குற்றச்சாட்டையும் அப்போது அவர் தெரிவித்தார்.