வரலாற்றில் மிக பெரிய அரசியல் மாற்றத்தை சந்தித்துள்ளது இத்தாலி. அங்கு நடைபெற்ற பொது தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜார்ஜியா மெலோனியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக உள்ளார்.
ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலக போருக்கே காரணமான முசோலினியின் ஆதரவாளராக ஒரு காலத்தில் இருந்துள்ளார். இத்தாலியின் சகோதரர்கள் என்ற கட்சியைச் சேர்ந்த மெலோனி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற தேர்தலில் 26 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. அக்கட்சி வகிக்கும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல்முறையாக தீவிர வலதுசாரி அரசு இத்தாலியில் அமைய உள்ளது. முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தீவிர வலதுசாரி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் மேட்டியோ சால்வினி, மெலோனியுடன் இணைந்து ஆட்சியை அமைக்க உள்ளனர். ஆனால், இதற்கு சில வாரங்கள் ஆகும்.
இத்தாலியில் மெலோனியின் வெற்றி என்பது மிக பெரிய மாற்றத்தையே குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பு நாடுகளில் ஒன்றாகவும் ஐரோப்பிய கண்டத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடாகவும் இத்தாலி திகழ்கிறது.
முன்னதாக, ஸ்வீடன் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் நல்ல வெற்றியை பெற்றிருந்ததையடுத்து, இத்தாலியில் அவர்கள் ஆட்சியையே பிடித்திருப்பது புவிசார் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியை தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய மெலோனி, அனைத்து இத்தாலியர்களுக்காகவும் ஆட்சி செய்வேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் கட்சி இதுவரை அதிகாரத்தில் இருந்ததே இல்லை. அதிகரித்து வரும் பணவீக்கம், மோசமான மின்சார நெருக்கடி, உக்ரைனில் போர் என பல சவால்களுக்கு மத்தியில் தீவிர வலதுசாரி அரசு பொறுப்பேற்க உள்ளது.
மெலோனிக்கு சக தீவிர வலதுசாரி தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். போலாந்து பிரதமர் மடேசுஸ் மோராவெய்கி, ஸ்பெயின் நாட்டின் வோக்ஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
வோக்ஸ் கட்சியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இறையாண்மை கொண்ட நாடுகளின் பெருமைமிக்க, சுதந்திரமான ஐரோப்பாவுக்கான வழியை மெலோனி காட்டியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஸ்பெயின் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ், "ஜனரஞ்சக இயக்கங்கள் எப்போதும் வளரும், ஆனால், அது எப்போதும் அதே வழியில் பேரழிவோடு முடிவடைகிறது" என்று எச்சரித்துள்ளார்.
புதிய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை கோருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையே ரஷிய அரசும் தெரிவித்துள்ளது.