பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நினைவு சடங்கில் கலந்துகொண்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 


ஷின்சோ அபே மறைவு


ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசிம்கொண்டிருக்கையில் அவர் டெட்சுய யமகாமி என்பவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி இருந்தது. அவருக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. முன்னாள் பிரதமர் என்பதால், அரசு சார்பில் செப்டம்பர் 27-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நினைவு சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



வெளியான வீடியோ


இதன்படி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஷின்சோ அபே நினைவு சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விடியோ வெளியாகியுள்ளது. இதற்காக அவர் நேற்று இரவே டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிகழ்வில் மோடியோடு சேர்த்து சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள வீடியோவில் பல நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி அமர்ந்துள்ளார். அவர் மட்டுமின்றி அங்கு இருப்பவர்கள் அனைவரும் மாஸ்க் இட்டு அமர்ந்துள்ளதை வீடியோவில் காண முடிகிறது. மேலும் சிலர் பிரதமர் இந்தியாவில் மாஸ்க் போடுவதில்லை என்று விமர்சனமும் செய்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்: உஷாரா இருங்க... கேன்சர் கூட வரலாம்: உணவு உண்ணும் நேரம் முக்கியம்: ஆய்வு சொல்வது என்ன?


ஜப்பான் பயணத் திட்டம்


முன்னதாக பிரதமர் மோடி ஜப்பானில் யாரை சந்திக்கப் போகிறார் என்று கூறிய மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விநாய்க் வாத்ரா, “ஜப்பான் முன்னாள் பிரதமரும் தனது நண்பருமான ஷின்சோ அபேவின் நினைவு சடங்கில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அபேயின் மனைவி ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணம், மறைந்த ஷின்சோ அபேவுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று கூறி இருந்தார்.






இந்தியாவுக்கும் இழப்புதான்


பிரதமர் மோடியும் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக பூமியோ கிஷிடோவை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதே போல ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வரவேற்றார். முன்பே கூறியதுபோல் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, "துயரம் நிறைந்த இந்த தருணத்தில் எங்களது இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது. சென்ற முறை நான் ஜப்பான் வந்தபோது, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் பேசினேன். அவரை இந்தியாவும் இழந்துள்ளது. அவரையும், ஜப்பானையும் நாங்கள் நினைவுகூர்கிறோம்", என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அபேயின் மனைவியையும் சந்தித்து பேசுவதாக கூறி இருந்தார். அவரை அடுத்ததாக சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.