ஏபிபி நாடு நடத்திய தடம் பதிக்கும் தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக 200 தொகுதிகளை கைப்பற்றுவது, எட்ட முடியாதது அல்ல என உறுதிபட தெரிவித்துள்ளார். ஏபிபி நாடு இம்பாக்ட் மேக்கர்ஸ் கான்க்லேவே 2025-ல் பங்கேற்று உரையாடிய தங்கம் தென்னரசு இதனை தெரிவித்துள்ளார்.
“அரசின் நிதிநிலை அறிக்கை சிறந்த நிதி மேலாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு“
இந்நிகழ்வின்போது, கலந்துரையாடிய நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு முறையான நிதி மேலாண்மை மூலமாக வருவாயை பெருக்கி நிதிநிலையை சமாளித்து வருவதாக தெரிவித்தார். செய்யப்படும் செலவுகள் அனாவசியமான செலவுகளாக இருக்கக் கூடாது என்றும், தேவையான நேரத்தில் தேவையான நிதியை ஒதுக்கினால் நிதி ஓரிடத்தில் சென்று முடங்காது எனவும் தெரிவித்தார். மேலும், அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதுபோல், சமுதாய முன்னேற்றத்திற்கும், அதாவது மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்றும், கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சிறந்த நிதி மேலாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறினார்.
அதோடு, பட்ஜெட் தயாரிப்பது ஒரு கடினமான சவால் என்றும், மத்திய அரசின் நிதி பகிர்வே குறைவுதான் எனவும், 40 சதவீதம் என்று சொன்னாலும் கூட, 31 சதவீதம் அளவிற்குதான் பகிர்வு வரும் என்று தெரிவிததார். ஜிஎஸ்டி வந்த பிறகு, எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது, எந்த மாதிரியான வரிகளை விதிப்பது என்பதில், மாநிலங்கள் உரிமையை இழந்துள்ளதாகவும், பல சூழ்நிலைகளில் நமது மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் இருந்து சரி செய்கிறோம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மத்திய அரசு ஓரளவுதான் நிதி கொடுக்கும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும் என்பதால், நிதிச்சுமை கூடுவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி 9.6 சதவீதமாக உள்ளதாக அமைச்சர் கூறினார்.
“ஆர்பிஐ-ன் நகைக்கடன் கட்டுப்பாடுகள் சாமானியர்களை பாதிக்கும்“
ரிசர்வ் வங்கி விதித்துள்ள தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகள் சாமானியர்களை பாதிக்கும் என்று தெரிவித்த அமைச்சர், சாமானியர்கள் அவசர தேவையின்போது நகையை தான் அடகு வைப்பார்கள் என்றும், அதற்காகவே அவர்கள் நகைகளை வாங்கி வைத்துள்ளார்கள் என்றும் கூறினார். மேலும், இது கிராமங்களில் அதிகம் என்பதால், ஆர்பிஐ கொண்டுவந்திருப்பது சாமானியர்களை பாதிக்கும் திட்டம் என்று கூறினார்.
மொத்த பணத்தையும் கட்டிவிட்டு மீண்டும் அடகு வைக்க வேண்டுமானால், அவர்கள் கந்துவட்டிக் காரர்களிடம் சென்று தான் வாங்குவார்கள் என்றும், அந்த வட்டிக்கடைக் காரர்கள் வங்கி வாசலிலேயே கடை போடுவார்கள் என்றும் விமர்சித்தார். இருப்பினும், கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்பிஐ-ன் இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும், ஆனால், மற்ற வங்கிகளுக்கும் சாமானிய மக்கள் செல்வதால், அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
“200 தொகுதிகளின் வெற்றி சாத்தியமானதுதான்“
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது சாத்தியமான இலக்குதான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக, 1971-ல் 184 தொகுதிகளில் திமுக வென்றது ஒரு சாதனை, எனவே 200 என்பது வெல்ல முடியாத டார்கெட் இல்லை என்று தெரிவித்தார். முறையான திட்டமிடல் இருந்தால் அந்த இலக்கை அடையலாம் என கூறிய அவர், திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மூலம், மக்களின் ஆதரவை பெற்று, இலக்கை அடைவோம் என தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், பலர் பிரிக்க பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை என்று அமைச்சர் கூறினார். மேலும், இப்போதே தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளோம் எனவும், மதுரை செல்லும் முதலமைச்சரை வரவேற்க அங்குள்ள மக்கள் தயாராக இருப்பதாகவும், அதுவே தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செய்தியை சொல்லும் என்றும் அவர் கூறினார்.
அதோடு, ரெய்டு போன்ற மற்ற விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், கவனம் வெற்றியை நோக்கி இருக்கும்போது, அது சாத்தியம் தான் என கூறினார். திமுக அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள், முதலமைச்சர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, திமுகவின் வெற்றிக்கு உதவும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்தார்.