2020 ஒலிம்பிக் தொடரை அடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது. ஒலிம்பிக் தளத்திற்கு முன்னேறியிருக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனையின் பயணமும் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது. 


தினந்தினம், வெவ்வேறு போட்டிகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில், ஜப்பானைச் சேர்ந்த 14 வயது மியுக்கி யமடா என்ற நீச்சல் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பாராலிம்பிக் தொடர் நீச்சல் விளையாட்டில், ஜப்பான் நாட்டுக்காக பதக்கம் வென்ற இளம் வீராங்கனையார் இவர். 



தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


பாராலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் ஜப்பான் வீரர் வீராங்கனைகளில் இளம் வயது போட்டியாளரான இவர், வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஜப்பானின் பதக்க கணக்கை தொடங்கி வைத்துள்ளார். பள்ளி மாணவியான மியுக்கி, பிறக்கும்போதே இரண்டு கைகள் இல்லாமலும், கால்கள் சிறிதும் பெரிதுமாக பிறந்தவர். ஆஸ்த்மா பிரச்சனை இருந்ததால், அதற்கு தெரப்பி எடுத்துக் கொள்ளும் முயற்சியில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியவர். படிப்படியாக நீச்சல் போட்டியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.


தேசிய, சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற மியுக்கிக்கு இதுவே முதல் பாராலிம்பிக்ஸ். இவர் பங்கேற்கும் எஸ்-2 பிரிவு என்பது, மிக தீவிரமான உடல் பாதிப்பு உள்ளவர்கள் பங்கேற்கும் போட்டி பிரிவு ஆகும். போட்டி தொடங்கியபோது, படப்படப்பாக காணப்பட்ட மியுக்கி, முழு உத்வேகத்துடன் பந்தய தூரத்தை கடந்து பதக்க வாய்ப்பை தனதாக்கினார். 14 வயது மியுக்கி முதல் எகிப்து நாட்டைச் சேர்ந்த  48 வயது இப்ராஹிம் வரை பாராலிம்பிக் கனவை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்கின்றனர்.


பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 


அந்த வகையில், நீச்சல் விளையாட்டு எஸ்-2 பிரிவில் போட்டியிட்ட மியுக்கி யமடா, 100 மீட்ட ர் பேக் ஸ்ட்ரோக்கில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 26.18 நொடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடம் பிடித்த சிங்கப்பூரின் யிப் பின் சியூவைவிட 9. 57 நொடிகள் மட்டுமே பின் தங்கியிருந்தார். வாழ்த்துகள் மியுக்கி!


Tokyo Paralympics 2020: பாரா டேபிள் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பவினாபென்!