இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை முன்னதாக சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தது. தொடர்ந்து அது வன்முறையாக மாறி கிளர்ச்சி ஏற்பட்ட நிலையில் நாட்டைவிட்டு முன்னதாக கோத்தபய ராஜபக்ச தப்பியோடினார். மேலும் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர்.
அதனையடுத்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் 225 உறுப்பினர்களில் 134 பேரின் ஆதரவைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க அதிபரானார்.
இச்சூழலில் கடந்த ஜூலை மாதம் மத்தியில் நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தற்போது தாயகம் திரும்பியுள்ளார்.
இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்துக்கு முன்னதாக வந்த அவரை, அவரது கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் விமான நிலையத்தில் சந்தித்தனர். கோத்தபய ராஜபக்சவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சவும் உடனிருந்தார்.
அங்கிருந்து அரசாங்கம் அவருக்காக ஒதுக்கிய ரகசிய பங்களாவுக்கு கோத்தபய சென்றார். அந்த பங்களா பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல் கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த கட்சியினரும் கூட அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்து அமைதி காத்து வந்தனர்.
இருப்பினும் விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்ச வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் இந்த பங்களாவைச் சுற்றி பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அவரை பாதுகாக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதனிடையே அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று கோத்தபய ராஜபக்ச தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் இரண்டு பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜ பக்சவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் மீண்டும் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தும் குற்றம்சாட்டியும் வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அந்நாட்டில் அசாதாரண சூழல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.