அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தின் மூன்று இடங்களில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பேரிடர் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தின் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நியூயார்க் ஆளுநர் கேத்தில் ஹோச்சல் மாநில பேரிடர் அவசரநிலையை அறிவித்தார். 


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் போலியோ வைரஸ் கடந்த ஜூலை மாதம் நகரின் வடக்கே உள்ள ராக்லேண்ட் கவுண்டியில் ஒருவருக்கு அடையாளம் கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் கழிவுநீரில் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்பதை சோதனை செய்ய தொடங்கினர். சமீபத்தில், நியூயார்க் நகரத்திற்கு நேர் கிழக்கே, லாங் தீவில் உள்ள நாசாவ் கவுண்டியில் கடந்த மாதம் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் போலியோ மரபணு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், மக்களிடையே இது அதிகமாக பரவலாம் என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். போலியோ வைரஸ் முன்னர் நியூயார்க் நகரத்திலும் அதன் வடக்கே உள்ள மூன்று மாவட்டங்களிலும் கழிவுநீரில் கண்டறியப்பட்டது. 


இதுகுறித்து மாநில சுகாதார ஆணையர் டாக்டர் மேரி டி. பாசெட் தெரிவிக்கையில், “நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இல்லாமல் இருந்தாலோ பக்கவாத நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும். எனவே நியூயார்க்வாசிகள் எந்த ஆபத்தையும் ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார். 






மாநிலத்தில் நூற்றுக்கணக்கானோர் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியாமல் இருக்கலாம். இருப்பினும் இன்னும் சில நாட்களுக்குள் அல்லது வாரங்களுக்கு வைரஸ் குறித்தான உடல்நிலை தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். 


கடந்த 10 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போலியோவை அழித்து ஒழிக்க பெரும் உதவி செய்தது. இந்த உயிர்கொல்லி நோயால், 5 வயதுக்கு கீழான குழந்தைகள் பெரும் பாதிப்படைந்தனர்.


1988 ஆண்டிலிருந்து, போலியோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 விழுக்காடு குறைந்தது. அந்த காலக்கட்டத்தில், 125 நாடுகளில், எண்டெமிக் நோயாக இருந்த போலியோவால் 3,50,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


அமெரிக்காவில் 1950களிலும் 1960களில் போலியோ மருந்து கண்டுபிடிக்க பின்னரும், போலியோ வெகுவாக குறைந்தது. இயற்கையாக போலியோ பாதிப்பு கடைசியாக, 1979ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போலியோ வைரஸ் பலவீனமாக இருந்தாலும், இந்த உருமாறிய நோயால் தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது.