உத்தரப் பிரதேசத்தில் பிட்புல் இன நாய்களை வளர்ப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்க பீட்டா அமைப்பு மீண்டும் அழுத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது.
பரவலாக நடைபெறும் நாய் சண்டைகள்
இந்தியாவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960இன் கீழ் நாய்களை சண்டையிடத் தூண்டுவது சட்டவிரோதமானது. ஆனால் வட இந்தியாவின் சில பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட நாய் சண்டைகள் பரவலாக நடைபெறுகின்றன.
பிட் புல் வகை நாய்கள் மற்றும் பிற நாய்கள் இந்த சண்டைகளில் பயன்படுத்தப்படும் நாய் இனங்கள் மிகவும் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறிப்பாக பிட்புல் இன நாய்கள் இந்தியாவின் பட இடங்களிலும் சட்டவிரோத விலங்குகள் சண்டை போட்டிகளுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
பீட்டா அமைப்பு கோரிக்கை
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த பிட்புல் நாய்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு, பீட்டா (பீப்பிள் ஃபார் தி எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்) அமைப்பு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் அரவிந்த் குமார் சர்மா ஆகியோரிடம் மீண்டும் தங்கள் கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த சட்டவிரோத நாய் சண்டைகளை ஒடுக்க வேண்டும் என்றும், இவற்றை இனப்பெருக்கம் செய்யும் சட்டவிரோத செல்லப்பிராணி கடைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் இந்த அமைப்பு கோரியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தொடரும் தாக்குதல்
முன்னதாக லக்னோவில் வயதான பெண் ஒருவர் பிட் புல்லால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். அதேபோல் குருகிராமில், பிட் புல் தாக்குதலில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். மீரட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
அதேபோல் நேற்று உத்தரப் பிரதேசம், காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் முகத்தை பிட்புல் இன நாய் கொடூரமாக கடித்துக் குதறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பிட்புல் இன நாயின் உரிமையாளரான காஜியாபாத்தைச் சேர்ந்த சுபாஷ் தியாகி, உரிமம் பெறாமல் நாயை வளர்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
மூன்று இனங்களுக்குத் தடை?
இந்நிலையில், பீட்டா அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில், தடை செய்யப்பட்ட இந்த இன நாய்களுக்கு கட்டாய கருத்தடை செய்வதை உரிமையாளர்களிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
பிட் புல் தவிர ராட்வீலர் மற்றும் மாஸ்டிஃப் இன நாய்களை தடை செய்வதற்கும் அரசு ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னதாக இதுகுறித்துப் பேசிய பீட்டா இந்தியாவின் கால்நடை மருத்துவக் கொள்கை ஆலோசகர் நிதின் கிருஷ்ணகவுடா கூறியதாவது: "ஒரு குழந்தை மீதான இந்தத் தாக்குதலுக்குப் பிறகாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். நாய் சண்டை போன்ற கொடூரமான மனித சுரண்டல்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் நாய்களை இந்தியா தொடர்ந்து அனுமதித்தால், அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
சட்டவிரோத சண்டைக்கு பயன்படுத்தப்படும் அனைத்து இனங்களுக்கும் தடை விதிப்பது காலத்தின் தேவையாகும். சண்டைக்காக பயன்படுத்தப்படும் இந்த நாய்கள் இனத்தின் வளர்ச்சியை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதே இத்தகைய கொடுமை மற்றும் துன்பங்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிட்புல் தடை
பிட் புல் நடுத்தர அளவிலான, குட்டையான பருமனான நாய், இது பயிற்சி பெறாதவர்களால் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இயல்புடையதாகக் கருதப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இயற்றப்பட்ட UK's Dangerous Dogs Act, 1991 சட்டத்தின்படி இந்த பிட்புல் நாய்கள் 'சண்டைக்காக வளர்க்கப்படும் நாய்களில்' ஒன்றாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.அதனால் பயிற்சி இல்லாதவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டத்தை மீறும் செயலாகும்.