கத்தார் நாட்டில் உள்ள அல் தாஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இவர்கள் கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கத்தார் நாடு பாதுகாப்பு படையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்து கத்தார் நாட்டு தனிச்சிறையில் அடைத்தனர்.


விசாரணைக்கு ஒப்புதல்:


இந்த நிலையில், அவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இது இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, மரண தண்டனைக்கு ஆளான 8 இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.


இந்த நிலையில், அவர்களது மரண தண்டனைக்கு எதிராக போராடுவோம் என்று இந்திய அரசு கூறியது போல, கத்தார் நீதிமன்றத்தில் 8 பேரின் மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்திய அரசின் மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனால், 8 பேரின் மரண தண்டனைக்கு எதிரான இந்திய அரசின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


8 பேருக்கு மரண தண்டனை:


அல் தாஹ்ரா நிறுவனம் ஆயுதப்பயிற்சி மற்றும் பாதுகாப்பு வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான தண்டனைக்கு ஆளான 8 பேரும் பணியாற்றி வந்தனர். தோஹாவில் உள்ள அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக தகவல்களை திரட்டி இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் 8 பேரையும் கத்தார் நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் தனிமை சிறையில் கத்தார் நீதிமன்றம் அடைத்தது. இந்த சூழலில், கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


மத்திய அரசின் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தில் அவர்களை வெளியில் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


மேலும் படிக்க: Parandur Airport: பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அடுத்த அதிரடி- 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை


மேலும் படிக்க: Uttarkashi tunnel rescue: தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதை; ஸ்ட்ரெச்சரில் கொண்டுவர ஏற்பாடு - வெளியான வீடியோ