காசாவில் அல் - ஷிஃபா மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுரங்கம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரத்தை இஸ்ரெல் ராணுவம் வெளியிட்டுள்ளது. 


 



 


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 6 வாரங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்காலிகமாக 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தி வைக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.






இஸ்ரேல் காசா பகுதியில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது. இதனை உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபை கடுமையாக எதிர்த்தது. ஆனால் இந்த மருத்துவமனைக்கு கீழ் ஹமாஸ் தலைமையகம் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் சுரங்கப்பாதை மூலம் செயல்பட்டு வருவதாக தொடர்ச்சியாக இஸ்ரேல் கூறி வந்தது.






இந்நிலையில் இன்று அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழே சுரங்கப்பாதை மூலம் ஹமாஸ் தலைமையகம் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் ஹமாஸ் அமைப்பினரால் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வந்ததற்கான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.






அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சுரங்கத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வந்ததற்கான தொலைத்தொடர்பு இணைப்புகளையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  


இதற்கிடையில் 4 நாள் போர் நிறுத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர்  ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். பணயக்கைதிகள் இன்று முதல் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்படுவதை வரவேற்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 150 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்பந்தம் உறுதியானது.