போப் பிரான்சிஸ் தனது இரு நுரையீரல்களில் நிமோனியா காய்ச்சலுடன் போராடி வரும் நிலையில், இரத்த பரிசோதனைகள் மூலம், சிறுநீரக பாதிப்பு இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் என்ன தெரிவித்துள்ளார் என்றும் அவரது உடல்நிலை குறித்தும் பார்ப்போம்.
சிறுநீரக பாதிப்பு:
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் போப் பதவியில் இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக நுரையீரல் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக, ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, இத்தாலியில் உள்ள ரோமின் ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், நுரையீரல்களில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்தன. மேலும், அவரது இரத்தப் பரிசோதனை மாதிரிகள், 'ஆரம்பகட்ட லேசான, சிறுநீரகச் செயலிழப்பைக் காட்டியதாகவும், இது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
Also Read: கல்லுக்குள் ஈரம்.! ஹமாஸ் இயக்கத்தினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணயக்கைதி.! வீடியோ..
”பிரார்த்தனைக்கு நன்றி”
போப் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சமீபத்தில் எனக்கு பல அன்பான செய்திகள் வந்தன, குறிப்பாக குழந்தைகளின் கடிதங்கள் மற்றும் வரைபடங்களால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். உங்கள் அன்பிற்கும், உலகம் முழுவதிலுமிருந்து நான் பெற்ற ஆறுதல் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உலகெங்கிலும் உள்ள தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு நன்றி.
மோசமாகும் உடல்நிலை:
இதுகுறித்து வாட்டிகன் தெரிவித்திருப்பதாவது, “ கடந்த சனிக்கிழமையன்று, போப்பின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியது. "போப் சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு சுவாசிக்க உதவுவதற்காக, ஆக்ஸிஜனைப் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும்,பரிசோதனைகளில் இரத்தம் உறைவதற்கு தேவையான பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காட்டியதைத் தொடர்ந்து அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. இரத்த பரிசோதனைகள், இரத்த சோகை இருப்பதை காட்டியிருப்பதால், இரத்தமாற்றம் தேவைப்பட்ட நிலையில், இரத்தம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைவிட அவரின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. எனினும், போப் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறார் என்றும் வாட்டிகன் தரப்பில் கூறப்படுகிறது.
Also Read: ”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!