ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள முக்கிய நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 அளவில் பதிவாகியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை ஏற்கனவே வெள்ளம், கனமழை புரட்டிப்போட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டில் வெலிங்கடன் பகுதியில் உள்ள வடமேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


நியூசிலாந்தில் நிலநடுக்கம்:


நியூசிலாந்தின் பார்ப்பராமுவின் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 நிமிடங்களில் சுமாார் 31 ஆயிரம் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். பார்ப்பராமுவில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மிகவும் அழகான நாடான நியூசிலாந்தில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கேப்ரியல் என்ற புயல் தாக்கியது. பலத்த சூறாவளிக் காற்றுடன் வீசிய இந்த கேப்ரியல் புயலால் நியூசிலாந்து உருக்குலைந்தது என்றே சொல்லலாம். சுமார் 46 ஆயிரம் மக்கள் இந்த புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர்.


துருக்கி துயரம்:


நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து மற்றும் நார்த்லேண்ட் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் அந்த நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதித்தது. இந்த துயரத்தில் இருந்தே அந்த நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அவர்களை கடும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.


நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சமீபத்தில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே மக்கள் மத்தியில் இருந்து நீங்காத நிலையில், நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.


பீதியில் மக்கள்:


துருக்கியில் பெரும் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பம் ஏற்பட்ட பிறகு மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக அளவில் சுற்றுச்சூழல் நிபுணர்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் இன்று வரை கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிரோடும், சடலமாகவும் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Turkey Earthquake: துருக்கி - சிரியா நிலநடுக்கம்: 41,000-ஐ கடந்த உயிரிழப்பு.. நிறைவுக்கு வரும் மீட்பு பணிகள்..


மேலும் படிக்க: Pakistan Food Crisis: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: 480% அதிகரித்த வெங்காயத்தின் விலை என்ன காரணம்?