தஞ்சாவூர்: மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் இயங்கி வரும் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்களுக்கு இங்கு சிகிச்சை பெற்ற பொதுமக்கள், 101 பொருட்களை சீர் வரிசையாக புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியிலிருந்து மயிலாட்டம், சிலம்பாட்டம் என வெடிகள் வெடித்து ஊர்வலமாக வந்து வழங்கி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவில், தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும், புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராய் அவர்களின் சமூகத்திற்கான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சமூகத்திற்கு மருத்துவர்களின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் என்பது சமூகத்திற்கு மருத்துவ நிபுணர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு வாய்ப்பாகும். சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தனிநபர்கள் சுகாதாரத் துறையில் தொழில்களைத் தொடர ஊக்குவிக்கவும் இந்த நாள் ஒரு வாய்ப்பாகும்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் மருத்துவ நிபுணர்களின் முக்கியத்துவத்தை COVID-19 தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது. தேசிய மருத்துவர் தின நடவடிக்கைகளில் பங்கேற்பது மருத்துவ நிபுணர்களுக்கான நன்றியைக் காட்டும் ஒரு வழியாகும், அதே நேரத்தில் சுகாதாரத் துறை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.
தேசிய மருத்துவர் தினம், மருத்துவ சேவையை வழங்குவதிலும் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையைக் கொண்டாடுகிறது. அதனால் இதை அர்ப்பணிப்பைக் கௌரவித்தல் நாள் என்றும் கூறலாம்.
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் சுகாதார முன்னேற்றங்களுக்கு மருத்துவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை இது அங்கீகரிக்கிறது. நோயாளிகள், சக ஊழியர்கள் மற்றும் சமூகங்கள் மருத்துவர்களின் அயராத முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தேசிய மருத்துவர் தினம் சுகாதார நிபுணர்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் நல்வாழ்வு மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கான ஆதரவையும் ஊக்குவிக்கிறது. இது சுகாதார வழங்குநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கிறது, இது சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும் நோயாளி விளைவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
இப்படிப்பட்ட சிறப்பான மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தஞ்சையில் இயங்கி வரும் பிரபலமாக காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் தாங்கள் நலன் பெற அயராது பாடுபட்ட மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் 101 பொருட்களை வாண வேடிக்கை முழங்க... மழை சாரலாக பொழிந்த போதும் தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழச் செய்தது.
தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்களது விளைநிலத்தில் விளைந்த நெல், காய்கறிகள், பழங்கள், கரும்புகள், வாழைத்தார் மற்றும் புத்தாடைகள் இனிப்புகள் அடங்கிய சுமார் 101 பொருட்களை சீர் வரிசையாக தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய மேளதாளம், சிலம்பாட்டம், கரகாட்டம், போன்ற நாட்டுப்புற கலைகளுடன் ஊர்வலமாக ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைக்கு எடுத்து வந்து மருத்துவர்களுக்கு வழங்கினர். மேலும் மருத்துவர்களுக்கு வழங்கினர். மேலும் மருத்துவர்களுக்கு திலகம் இட்டு தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.
பொதுமக்களின் இந்த பேரன்பில் நெகிழ்ந்த மருத்துவர்கள் மக்களின் நலன் காக்கும் பணியில் மேலும் சிறப்பாக சேவை புரிவோம் என்று உறுதியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதனால் புதிய பஸ்ஸ்டாண்ட் முதல் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை வரை விழாகோலமாக காட்சியளித்தது.