பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பால் விலையானது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் ரூ. 210 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் , ஒரு கிலோ கோழி கறி விலையானது ரூ. 780 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பொருளாதார நெருக்கடி:


பாகிஸ்தானில் சில வருடங்களாகவே விலைவாசி உயர்வு காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது மேலும் பணவீக்கத்தை தூண்டியது.


இந்நிலையில் பிராய்லர் கோழி கறி விலையானது ஒரு கிலோ ரூ. 780 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போன்லெஸ் சிக்கன் ரூ. 1000-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பால் விலை லிட்டருக்கு ரூ. 210 ( தோராயமாக இந்திய ரூபாய் – 65 ) ரூபாயில் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விலை உயர்வானது ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் நடுத்தர மக்களுக்கு மேலும் சிரமத்தை கொடுத்துள்ளது.




கடந்த மாதம், உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் வாராந்திர பணவீக்கம் 31.83 சதவீதமாக உயர்ந்தது.


விலை உயர்வு:


குறிப்பாக  இந்த 17 பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி 2023 நிலவரப்படி, வெங்காயம் (482.07 சதவீதம்), சிக்கன் (101.93 சதவீதம்), தேயிலை (65.41 சதவீதம்), முட்டை (64.23 சதவீதம்), டீசல் (57.34 சதவீதம்), பாசுமதி அரிசி (56.09 சதவீதம்), பாசிப்பயறு (55.63 சதவீதம்), அரிசி மாவு (55.63 சதவீதம்)அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வேறு வழியில்லை:


விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) 6 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தின் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் பகுதியை தாமதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 170 பில்லியன் டாலர் வரி திட்டத்தை பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.




கடுமையான வரி விதித்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளதால், இது போன்ற முடிவை எடுப்பதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால் , பாகிஸ்தானில் அந்நிய செலாவணி குறைந்து வருவதால் ஐ.எம்.எஃப் கடன் உதவி திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.