கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான டி.எஸ். வீரய்யா தொகுத்த 'அம்பேத்கரின் போதனைகள்' என்ற நூலை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (28.06.2025) வெளியிட்டார்.

"அரசியலமைப்பை மாற்ற முடியாது"

நிகழ்ச்சியில் பேசிய அவர், "எந்தவொரு அரசியலமைப்புக்கும் அதன் முகவுரையே ஆன்மாவாகும். இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது. பாரதத்தைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. ஆனால், முகவுரை மாற்ற முடியாதது. அரசியலமைப்பு வளர்ந்ததற்கான அடிப்படையே முகவுரைதான். 

ஆனால், பாரதத்திற்கான இந்த முகவுரை 1976ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் மாற்றப்பட்டது. இதில், சோசலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலகட்டமான அவசரநிலையின் போது, ​​மக்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

டாக்டர் அம்பேத்கர் மிகவும் கடினமான பணிகளைச் செய்தார். அவர் நிச்சயமாக அதில் கவனம் செலுத்தியிருப்பார். அந்த முன்னுரையை நமக்கு மிகவும் புத்திசாலித்தனத்துடன் அதை உருவாக்கியவர்கள் நமக்கு வழங்கினார். 

என்ன சொல்கிறார் துணை ஜனாதிபதி?

கடந்த 1975ஆம் ஆண்டு, ஜூன் 25 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட 22 மாத கடுமையான அவசரநிலையின்போது அரசியலமைப்பின் ஆன்மா மாற்றப்பட்டது. அவசரநிலையின் போது முகவுரையில் சில வார்த்தைகளைச் சேர்ப்பது அரசியலமைப்பை உருவாக்கியவர்களைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர வேறில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நம் இதயங்களில் வாழ்கிறார். அவர் நம் மனதில் ஆதிக்கம் செலுத்தி நம் ஆன்மாவைத் தொடுகிறார். அம்பேத்கரின் போதனைகள் நமக்கு தற்காலத்திலும் பொருந்துகின்றன. அரசியலமைப்பின் ஆன்மாவான அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்ட முகவுரை மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக மதிக்கப்பட வேண்டும்.

 

இந்தியா முன்பு ஒரு முறை தனது சுதந்திரத்தை இழந்தது மட்டுமல்லாமல், அதன் சொந்த மக்களில் சிலரின் துரோகத்தாலும் பாதிக்கப்பட்டது. நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்தில் சிக்க கூடாது. நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.