வளைகுடா நாடுகளில் மிகவும் முக்கியமான நாடுகளில் ஒன்றாகவும், எண்ணெய் வளமும், செல்வ செழிப்பும் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது குவைத். இந்த நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. குவைத் நாட்டின் மன்னராக நவாஃப் அல் அகமது அல் ஜாபேர் அல் ஷபா இருந்து வந்தார். அவருக்கு வயது 86. இந்த நிலையில், இன்று அவர் காலமானார். குவைத் மன்னர் காலமான செய்தி அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குவைத் மன்னர் காலமானார்:


குவைத் நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு, குரானின் வரிகள் ஒளிபரப்பிய பிறகு மன்னர் காலமான செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதை அந்த நாட்டின் அமைச்சரான ஷேக் முகமது அப்துல்லா அல் ஷபா வேதனையுடன் தெரிவித்தார்.


மன்னர் நவாப் கடந்த நவம்பர் மாத இறுதியில் உடல்நலக்குறைவால் அந்த நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் நவாப் இன்று காலமானார். குவைத் மன்னரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


யார் இவர்?


தற்போது காலமான மன்னர் நவாஃப் 1937ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை குவைத் மன்னர் ஷேக் அகமது அல் ஜாபேர் அல் ஷபா. அவருக்கு 5வது மகனாக நவாப் பிறந்தார். இவரது தந்தை 1921ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை குவைத் நாட்டை ஆட்சி செய்தார். இவர் தன்னுடைய 25வது வயது முதல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.


ஹவாலி மாகாணத்திற்கு தன்னுடைய 25வது வயதில் கவர்னராக பொறுப்பேற்றார். 1978ம் ஆண்டு முதல் அமைச்சராக பொறுப்பு வகிக்கத் தொடங்கினார். நவாப் கடந்த 2006ம் ஆண்டு பட்டத்து இளவரசராக அவரது சகோதரர் ஷேக் ஷபா அல் அகமது அல் ஷபாவால் நியமிக்கப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு அவரது சகோதரர் 91 வயதில் உயிரிழந்த பிறகு, நவாப் குவைத்தின் மன்னராக முடிசூட்டினார். தற்போது காலமாகியுள்ள நவாஃப் குவைத் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


குவைத் மன்னர் நவாஃப் காலமானதைத் தொடர்ந்து தற்போதைய பட்டத்து இளவரசரான ஷேக் மிஷல் அல் அகமது அல் ஷபா குவைத் மன்னராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னர் நவாஃபின் மறைவால் குவைத் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.


மேலும் படிக்க: ராஜபக்சக்கள் திருடிய பணத்தை மீட்டால் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது: இலங்கை முன்னாள் அதிபர்


மேலும் படிக்க: urkish MP: இஸ்ரேலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கிய எம்.பிக்கு மாரடைப்பு; என்ன சொன்னார் தெரியுமா?