இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர் குறித்து தான் கடந்த சில மாதங்களாகவே உலக நாடுகளும் ஊடகங்களும் பேசி வருகின்றன. குறிப்பாக ஐ.நா சபை போரினை உடனடியாக கைவிடவேண்டும் என பலமுறை அறிவுருத்தியும் நிரந்தர போர் நிறுத்தம் என்பது இதுவரை நடக்கவில்லை. போர் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தி வருகின்றது.


இந்நிலையில் துருக்கி நாட்டின் எம்.பி. ஒருவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து பேசிக்கொண்டு இருந்தபோது ஹார்ட் அட்டாக் அதாவது மாரடைப்பு ஏற்பட்டு கீழே நிலைதடுமாறி விழுந்துள்ளார். குறிப்பாக அவர் தனது உரையில் இஸ்ரேல் கட்டாயம் அல்லாவின் கோபத்திற்கு ஆளாகும் என தெரிவித்த பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இது குறித்து மிகவும் பரவலாக பேசப்படுகின்றது. 


துருக்கிய எம்.பி., ஹசன் பிட்மேஸ் பாரளுமன்றத்தில்  இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றார். இது தொடர்பான வீடியோ அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் மட்டும் இல்லாமல் பலரது மத்தியிலும் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. 


துருக்கி நாட்டின் ஃபெலிசிட்டி கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் பிட்மேஸூக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாகவே, அவருக்கு பாராளுமன்றத்தில் CPR கொடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக துருக்கிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஃபஹ்ரெட்டின் கோகா பிட்மேஸின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


டாக்டர் கோகாவின் அறிக்கையில், “துருக்கி கிராண்ட் நேஷனல் அசெம்பிளியின் பொதுச் சபையில் தனது உரையின் போது பிட்மேஸுக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்காரா பில்கென்ட் சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு தாயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு உடனடியாக  அவரை ஆஞ்சியோகிராஃபி அளித்தது. ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, அவர் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்தில் உள்ளார். அங்காரா பில்கென்ட் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  பிட்மேஸை மருத்துவ ஊழியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். 






துருக்கி எம்.பி., பிட்மேஸ் தனது உரையின் போது, ​​துருக்கிய எழுத்தாளர் செசாய் காரகோக்கின் கவிதையை மேற்கோள் காட்டினார், "வரலாறு அமைதியாக இருந்தாலும், உண்மை அமைதியாக இருக்காது, அவர்கள் நம்மை அகற்றினால், எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், நீங்கள் எங்களை விட்டு விடுங்கள், மனசாட்சியின் வேதனையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது, வரலாற்றின் வேதனையிலிருந்து தப்பித்தாலும், அல்லாஹ்வின் கோபத்திலிருந்து உங்களால் தப்ப முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.