கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வடக்கு காசாவை நிலைகுலைய வைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 18,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 


அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் போர்:


இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. 


தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் பிடித்த வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு காசா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்த நிலையில், காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டு பணயக்கைதிகள், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தவறுதலாக கொல்லப்பட்டனர். அதை தவிர்த்து, பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஷிஜாய்யா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


இஸ்ரேலிய பணயக்கைதிகளை தவறுதலாக கொன்ற இஸ்ரேல் ராணுவம்:


கடந்த சில நாட்களாகவே, இஸ்ரேல் ராணுவம், அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், அவர்களை அச்சுறுத்தலாக நினைத்து இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மூவரும் சிறைபிடிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஹமாஸ் அமைப்பினர், அவர்களை அங்கேயே விட்விட்டு சென்றிருக்கலாம். அந்த இடத்துக்கு பணயக்கைதிகள், எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை. ராணுவம், வருத்தம் தெரிவித்து கொள்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


ஆயுதங்களை போட்டுவிட்டு சரண் அடைந்துவிடுமாறு ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார்.


இதுகுறித்து இஸரேல் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், "போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் அமைப்பின் முடிவு  ஆரம்பமாகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் ஒன்று சொல்லி கொள்கிறேன். எல்லாம் முடிந்துவிட்டது. யஹ்யா சின்வாருக்காக (ஹமாஸ் அமைப்பின் தலைவர்) உயிரை விட்டு விடாதீர்கள். இப்போதே சரணடையுங்கள். கடந்த சில நாட்களில், 12க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நமது படைகளிடம் சரணடைந்துள்ளனர்" என்றார்.