இலங்கை அரசியலில் அதிகாரமிக்க நபர்களாக வலம் வருபவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். மகிந்த ராஜபக்ச தொடங்கி கோத்தபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நம்மா ராஜபக்ச, யோஷிதா ராஜபக்ச, சஷிந்திரா ராஜபக்ச வரையில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாரமிக்க பதவிகளில் இருந்தவர்கள்.


இலங்கை அரசியலை ஆட்டிப்படைக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்:


இவர்களின் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் இருக்கின்றனர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில், இலங்கை அதிபராகவும் 2002 முதல் 2004 மற்றும் 2018 முதல் 2019 வரையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
 
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, அதிபராக பதவி வகித்தபோதும், 2019 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தபோதும் நிதித்துறையையும் மகிந்த ராஜபக்சவே கவனித்து வந்தார். இவர் அதிபராக பதவி  வகித்த காலத்தில்தான், விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. தனது முதல் பதவிக்காலத்தில் நடந்த உள்நாட்டு போரில் விடுதலை புலிகலை தோற்கடித்தார். 


இதை தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியை பதிவு செய்தார். ஊழல் செய்ததாகவும் போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் மகிந்த ராஜபக்ச மீது கடும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சியை பறி கொடுத்தார். 


இருப்பினும், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபராக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்ச. மகிந்த, கோத்தபய பதவிக்காலத்தில் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நம்மா ராஜபக்ச, யோஷிதா ராஜபக்ச, சஷிந்திரா ராஜபக்ச உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.


"திருடிய பணத்தை மீட்டால் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது" 


பழைமைவாத, பெளத்த பேரினவாதத்தை வைத்து அரசியல் செய்து வந்த ராஜபக்சவுக்கு பேரிடியாக அமைந்தது இலங்கை பொருளாதார நெருக்கடி. இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மக்கள், ராஜபக்ச அரசுக்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தினர் துடைத்து எறியப்பட்டனர். 


இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சக்கள் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது. ராஜபக்சக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும்" என்றார்.