பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு, 5,000 ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.


இஸ்ரேல் போர்:


அதுமட்டும் இன்றி காசா பகுதியில் இருந்து ஆயுதம் ஏந்திய சிலர் இஸ்ரேலுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி மக்களை பணயக்கைதி வைத்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.


இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், அவர்களை ஏமாற்றி தப்பித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த சூழலில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட மூதாட்டி ஹீரோவானது எப்படி?


தி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 65 வயதான ரேச்சல் எட்ரியின் வீட்டில் கையெறி குண்டுகளுடன் நுழைந்துள்ளார். ரேச்சலையும் அவரது கணவர் டேவிட்டையும் அவர்கள் பணயக்கைதியாக பிடித்து வைத்தனர். 


வீட்டுக்கு வந்து காவல்துறை அதிகாரிகள் காப்பாற்றும் வரை, அவர்களுக்கு சாக்லெட், பிஸ்கட்களை கொடுத்து ரேச்சல் ஏமாற்றியுள்ளார். இறுதியில், ரேச்சல் எட்ரி தனது போலீஸ் அதிகாரி மகனின் உதவியுடன் மீட்கப்பட்டார். 


மூதாட்டியை பாராட்டிய அமெரிக்க அதிபர் பைடன்:


புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீவிரவாதியிடம் இருந்து தப்பித்த மூதாட்டி ரேச்சலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணத்தின் போது, அவரை சந்திக்க அழைக்கப்பட்ட பல இஸ்ரேலியர்களில் மூதாட்டி ரேச்சலும் ஒருவர். சந்திப்பின்போது, மூதாட்டி ரேச்சலை கட்டியணைத்த ஜோ பைடன், நாட்டை பாதுகாத்ததற்கு பாராட்டு தெரிவித்தார். 


தீவிரவாதியிடம் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், "அவர் (தீவிரவாதி) பசியுடன் இருந்தால், கோபப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். நான் இன்சுலின் ஊசி போட வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். எனக்கு போலீஸ் அதிகாரி மகன் இருப்பதை அவரிடம் இருந்து மறைக்க திசைதிருப்பினேன்.


நான் அவருக்கு கோக், தண்ணீர் போன்ற பானங்களை வழங்கினேன். நான் உனக்கு ஹீப்ரு கற்றுத் தருகிறேன். நீ எனக்கு அரபு மொழி கற்றுத் தர வேண்டும் என பேசி திசைதிருப்பினேன்" என்றார்.


இதையும் படிக்க: காசாவில் மக்களை கொல்ல வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தியதா இஸ்ரேல்? சர்ச்சைக்குரிய ஆயுதத்தின் ஆபத்து என்ன?