ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.
ராஜஸ்தான் அரசியல்:
ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.
இதைத்தீர்க்க காங்கிரஸ் மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர், இருவரையும் அழைத்து, சமாதானப்படுத்தினர். இறுதியில், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
சச்சின் பைலட்டுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் அசோக் கெலாட்:
இந்த நிலையில், அசோக் கெலாட் தெரிவித்த கருத்து ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தான் விரும்புவதாகவும் ஆனால், அந்த பதவி தன்னை விட்டு செல்ல மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து பேசுகையில், "நான்காவது முறையாக நான் முதலமைச்சராக வேண்டும் என்று ஒரு பெண் ஆதரவாளர் ஒருமுறை என்னிடம் கூறினார். முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பினேன். ஆனால், இந்தப் பதவி என்னை விட்டுச்செல்ல மறுக்கிறது" என்றார்.
சச்சின் பைலட் குறித்து பேசிய அவர், "அவருக்குள் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அதன் காரணமாகவே கட்சி தலைமை அவரை மாநிலத்தை வழிநடத்த மூன்று முறை தேர்வு செய்தது. எவ்வாறாயினும், உயர்மட்டக் குழு எடுக்கும் எந்தவொரு முடிவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்" என்றார்.
2020ஆம் ஆண்டு நடந்தது என்ன?
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
தொடக்கத்தில், முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சராகவும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார். இருப்பினும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார்.