Trump Putin: ட்ரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தை காரணமாக, உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை:
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம் அமல்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை இரண்டரை மணி நேர தொலைபேசி வாயிலாக விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் நிறுத்த திட்டத்தில் கையெழுத்திட ரஷ்ய தலைவரை வற்புறுத்த அமெரிக்க நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், இரு உலகத் தலைவர்களும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர் . இரு தலைவர்களும் காலை 10:00 மணியளவில் தொடங்கி நண்பகல் 12:35 வரை தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியத்துவம் என்ன?
இந்த அழைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ரஷ்யா வழங்க விரும்பும் சலுகைகள் குறித்த ஒப்பந்தத்தைப் பெறுவதாகும். இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் உக்ரைனில் இருந்து கைப்பற்றிய பிரதேசத்திலிருந்து படைகளை திரும்பப் பெறத் தயாராக உள்ளதா என்பதும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இரு தலைவர்களுக்கும் இடையிலான அழைப்பு வந்துள்ளது. இருப்பினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யப் படைகள் உக்ரைன் பிரதேசங்களைத் தொடர்ந்து தாக்கி வருவதால், புதின் அமைதிக்கு தயாராக உள்ளாரா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்.
புதின் ஒப்புதல்:
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதை 30 நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் திட்டத்திற்கு புதின் ஒப்புக்கொண்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரோதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் உளவுத்துறை உதவியை நிறுத்த வேண்டும் என்று புடின் ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த அமைதிக்குப் பிறகு, கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசிய பிறகு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
உதவி நாடும் ஜெலன்ஸ்கி
கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகக் கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வரவேற்றார். அந்த சந்திப்பில், ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் உக்ரைன் அதிபர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான நிலையில் முடிந்தது.
புதன்கிழமை பின்லாந்துக்குச் செல்லும் ஜெலென்ஸ்கி, அங்கு பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பைச் சந்திப்பார். உக்ரைனுக்கு 200 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள புதிய ராணுவ உதவியை வழங்குவதாக பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.