உத்தரப் பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமியை 3 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் பாதையில் சிறுமியை வழிமறித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் கொடூரர்கள்.

தொடரும் சாதிய கொடூரங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒரு மைனர் உள்பட 3 பேர் இணைந்து தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "நேற்று காலை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிக்கு செல்லும் வழியில் பயங்கரம்:

15 வயது மைனர் ஒருவர், அந்த வழியாக காரில் சென்றிருக்கிறார். அப்போது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியிடம், பள்ளியில் இறக்கிவிடுவதாகக் கூறி, வாகனத்தில் அமர வைத்துள்ளார். காரை ஓட்டிச் சென்ற மைனர், வழியின் நடுவில், பிரதீப் (18) மற்றும் சவுரப் (18) ஆகிய இருவரை வாகனத்தில் ஏற்றியுள்ளார். பின்னர், சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கட்ட வைத்துள்ளனர். வாயை மூடி, பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவருக்கு சுயநினைவு திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி முதலில் தனது அத்தையிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர்கள் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயின் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்றே இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மூன்றாவது நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.