மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.


மோக்கா புயல்:


வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. மோக்கா புயல் அதிதீவிர புயலாக வீசியதால்,  வங்காளதேசம்-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை நிலை குலையசெய்தது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் -மியான்மர் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அந்த பகுதிகளிலும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.


145 பேர் உயிரிழப்பு:


இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர்வாசிகள் 24 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


முன்னதாக, கடந்த 13ஆம் தேதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து  கடந்த 14ஆம் தேதி  காலை 08.30  மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டிருந்தது.


இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210  கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. 


மேலும் படிக்க 


PUBG Game: இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு.. அம்சங்கள் என்ன?


TN 10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது? முழு அட்டவணை இதோ!