2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பப்ஜி விளையாட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு விளையாட்டை மாற்றி அமைத்துள்ளது கிராஃப்டன் நிறுவனம். தற்போது சோதனை அடிப்படையிலான அனுமதியை பெற்றுள்ளது அந்த நிறுவனம். 3 மாதம் சோதனை அட்டிப்படையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பப்ஜிக்கு பதில் பிஜிஎம்ஐ என்ற பெயரில் விளையாட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இதனை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 




 பப்ஜி" விளையாட்டுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டை கொண்டாடி தீர்க்கின்றனர். பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடிந்தது. ஆனால் சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு 2020 ஆம் தடை விதித்தது.


இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு  மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல்  கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி  ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, பப்ஜியை விட சிறந்த விளையாட்டை தங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற போட்டா போட்டி கேமிங் நிறுவனங்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது.


இந்த நிலையில்தான், பிப்ரவரி 25, 2021 ல், க்ராஃப்டன் நிறுவனம் மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் பிஜிஎம்ஐ ஆப், கிராஃப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. பப்ஜி ஆப்-ஐ இந்திய அரசு தடை செய்தபோது சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை குறைகளையும் சரி செய்துவிட்டதாக பிஜிஎம்ஐ ஆப் நிறுவனம் கூறினாலும், பெயர் மாற்றத்தை தவிர பெரிய அளவுக்கான மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டது.


மேலும் பப்ஜி விளையாட்டிற்கு பலரும் அடிமையாகி மன அழுத்தம், மன நல குறைபாடு என குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்தியாவில் இந்த விளையாட்டினால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டனர். பப்ஜி கேமில் இருக்கும் சில அம்சங்களை வாங்க பணத்தை திருடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியது. பிஜிஎம்ஐ விளையாட்டில் பர்சேஸ் வரம்பு ரூ.7 ஆயிரம் தான் என்றாலும், அதற்காக குழந்தைகள் வீட்டிலேயே திருடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இது போன்ற தொடர் புகார்கள், தற்கொலை, கொலை சம்பவங்களால் பிஜிஎம்ஐ விளையாட்டு 2022 ஆம் ஆண்டு மீண்டும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.


கடந்த 10 மாதங்களாக இந்த விளையாட்டு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் மத்திய அரசு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் சட்டங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.