10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 9,14,320 மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியாகின. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
78 ஆயிரம் பேர் தோல்வி
9,14,320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்தனர். 78,706 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. கடைசி இடம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு (83.54 %) கிடைத்துள்ளது.
எத்தனை பேர் நூற்றுக்கு நூறு?
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.