பிரிட்டனில் நாய்கள் தாக்கியதில் 6 வயது சிறுமி காயமடைந்த நிலையில் 17 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


நாய்கள் தாக்கியதில் 6 வயது சிறுமி காயமடைந்ததை தொடர்ந்து 17 நாய்களை கிரேட்டர் மேன்செஸ்டர் போலீஸ் பறிமுதல் செய்தது. கேரிங்டன்னின் புறநகர்ப் பகுதியின், ஏக்கர்ஸ் லேன்னில் நடந்த இச்சம்பவத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக உள்ளது.


போலீஸ் இச்சம்பவத்தின் பின் மூன்று பேரை கைது செய்து பிணையில் விடுவித்தது. இதன்பின், நான்கு நாய்கள் உடனடியாக பிடிக்கப்பட்டதாகவும், பின்னர் மேலும் நான்கு நாய்களும் ஒன்பது குட்டிகளும் பிடித்துச் செல்லப்பட்டன. தெற்கு மேன்செஸ்டர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வேன் ஒன்றை வைத்தும் விசாரனை நடந்து வருவதாக போலீஸ் கூறியுள்ளது.


பிபிசியிடம் பேசியதில், துப்பறியும் ஆய்வாள்ர் மேத்தியூ டிக்சன் போலீஸாரின் விசாரனை நடந்துகொண்டு இருப்பதாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கூறினார்.


ஜனவரி மாதத்தில், இதே போன்ற ஒரு பயங்கரமான நாய் தாக்குதல் ஒன்றில் ஓர் பெண் தன் கையையே கிட்டத்தட்ட இழந்துவிட்டார்.


மெட்ரோ இதழில் கூறியபடி, ரேச்சல் ஆண்டெர்சன், 43, தன் நண்பரின் குழந்தையை  பார்த்துக் கொண்டிருக்கையில், அவர்களது வளர்ப்பு நாய் அவரை பயங்கரமாக தாக்கியது. சுமார் 45 நிமிடங்கள் அந்த நாயுடன் போராடியதில் அப்பெண்னின் முகத்தையும் கையையும் கடித்துள்ளது.  


அந்தப் பெண்ணுக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது கையை சரிசெய்ய கிட்டத்தட்ட ஒரு டஜன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.


2018 இல் பதிவு செய்யப்பட்ட சுமார் 16,000 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​2022 இல் இங்கிலாந்தில் 22,000 கட்டுப்பாடற்ற நாய்களால் காயம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.


நாட்டில் நாய்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, தாக்குதல் சம்பவங்கள் 37 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


எச்சரிக்கை தேவை?


வெறிநாய் கடித்த 2 முதல் 12 வார காலத்திற்குள் காய்ச்சலுடன் நோய் அறிகுறி ஆரம்பிக்கும். சில நேரங்களில் 6 வருடத்தில் கூட நோய் அறிகுறி தெரியலாம். தூக்கமின்மை, படபடப்பு, பயம், உடற் பாகங்கள் செயலிழத்தல், பழக்கவழக்கங்களில் மாற்றம், அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், தண்ணீரைப் பார்த்து அச்சம், குழப்பம், நினைவாற்றல் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். பொதுவாக ரேபீஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் 2 முதல் 10 நாட்களுக்குள் இறந்துவிடுவார்கள். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றை கவனமாகப் பராமரிக்க வேண்டும்.  


ரேபீஸ் மட்டுமே நாய் கடித்தால் வரும் என்று தெரிந்துவைத்துள்ளோம். ரேபீஸ் தவிர 'எக்கினோகாக்கஸ்' என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடாட்டிட்' என்ற கொடிய நோயும், நாயினால் பரவுகிறது. இதுபோல் நாயின் ரோமங்களால் ஏற்படும் சுவாசக்கோளாறு என நிறைய உள்ளன.


நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


நாய்க்கடித்தவுடன் அந்த இடத்தை சோப்பு போட்டு குறிப்பாக கார்பானிக் அமிலம் அதிகமுள்ள சோப்பு கொண்டு 5 நிமிடங்களுக்கும் குறையாமல் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் அந்த இடத்தில் மருந்தகங்களில் கிடைக்கும் போவிடோன் ஐயோடின் களிம்பைப் பூச வேண்டும். இதனால் காயத்தில் உள்ள வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இது வெறும் முதலுதவி.


மருத்துவரின் அறிவுரைப்படி 0(அதாவது நாய் கடித்த நாள்), 3, 7, 14, 28 மற்றும் 45-வது நாட்களில் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். தொப்புளைச் சுற்றி தடுப்பூசி என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. தற்போதெல்லாம் கைகளில் போடப்படுகிறது. தெருநாய் கடித்திருந்தால் கடித்த நாயை 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும். அதற்குள் நாய் இறந்துவிட்டால்  அந்தப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரித்து தடுப்பூசி போடப்படும்.