ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது திடீரென மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நடத்திய நிலையில், ஈரானின் ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரானும் இன்று இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சூழலில், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன.?
ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலையில் நடத்திய வான்வழி தாக்குதலில், அந்நாட்டின் ராணுவ தளபதி உள்ளிட்ட 7 முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலை அற்புதம் என்று கூறியுள்ளதோடு, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாய்ப்பை ஈரான் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ள அவர், உடனடியாக அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அவ்வாறு செய்ய ஈரான் தவறும் பட்சத்தில், இதைவிட கொடிய தாக்குதலை சந்திக்க நேரிடும் என்றும், அதற்கான ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
மேலும், அதற்கு இன்னும் நேரமிருப்பதாகவும், அதற்குள் டீலை முடியுங்கள் என்றும் ஈரானுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் ட்ரம்ப்.
ஈரானை திடீரென தாக்கிய இஸ்ரேல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தி நிலையங்கள், ஏவுகணைகள் பதுக்கப்பட்டுள்ள இடங்கள் மீது திடீரென இன்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.
அதோடு, இன்னும் சில முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டதை அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆரஎன்ஏ உறுதி செய்தது.
ஈரானின் பதில் தாக்குதல்
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால், மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்கியது ஏன்.?
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இயங்கும் ஹவுதி அமைப்பு ஆகியவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் மீது ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், மேற்கூறிய அமைப்பினருக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், அணு ஆயுத உற்பத்தியிலும் ஈரான் ஈடுபட்டு வருவது, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே தற்போது ஈரானை இஸ்ரேல் தாக்கி வருகிறது.