ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும், இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அப்போது, மோடி அவரிடம் வலியுறுத்திய விஷயம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியது என்ன.?
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது,ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்த பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, பதற்றத்தை தணித்து, அமைதியையும், நிலைத் தன்மையையும் ஏற்படுத்த வழிவகுக்குமாறு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பரஸ்பரம் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தி நிலையங்கள், ஏவுகணைகள் பதுக்கப்பட்டுள்ள இடங்கள் மீது திடீரென இன்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி முகமது பகேரி, சில முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலையடுத்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டதை அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆரஎன்ஏ உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால், மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், அதனை நெதன்யாகு செயல்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, ட்ரம்ப் இஸ்ரேலை பாராட்டியும், ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதனால், இந்த போர் தற்போதைக்கு ஓயுமா என்பது கேள்விக்குறியே...